டிஸ்மிஸ் ஆன 12 ஐடி அதிகாரிகள் விவரம் வெளியீடு: சொத்து குவிப்பு, லஞ்சம், ஊழல், பாலியல் புகார்களுக்கு ஆளானவர்கள்

புதுடெல்லி: சொத்து குவிப்பு, ஊழல், லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வருமான வரித்துறையைச் (ஐடி) சேர்ந்த 12 மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், அவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

மத்திய நிதியமைச்சகம், இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் ஒருபகுதியாக ஊழல், முறைகேடு, பாலியல் துன்புறுத்தல், சொத்துக் குவிப்பு, வரிவிலக்கில் சலுகை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய 12 மூத்த அதிகாரிகளை நேற்று முன்தினம் இரவு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இவர்களில் தலைமை ஆணையர், முதன்மை ஆணையர், ஆணையர் போன்ற உயர்பதவிகளில் உள்ளவர்கள் அடங்குவர். நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகள் 12 பேர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. நேற்று, அவர்களின் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Advertising
Advertising

1. அசோக் அகர்வால் (சிவில் கோடு: 85042): இந்திய வருவாய் பணியில் 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், தற்போது வருமான வரித்துறை இணை கமிஷனர். அமலாக்கத்துறையில் முன்னாள் துணை இயக்குனராக இருந்தபோது 1999 - 2014ம் காலகட்டங்களில் சர்ச்சை சாமியார் சந்திராசாமியுடன் தொடர்புடைய தொழிலதிபர்களுக்கு முறைகேடாக உதவி செய்து, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர். 2005ம் ஆண்டு ரூ.12 கோடி சொத்து வாங்கியது தொடர்பாக, சிபிஐ இவர் மீது வழக்குபதிவு செய்தது. இவர் மீது, பல்வேறு புகார்கள் தொடர்பாக 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

2. எஸ்.கே.வஸ்தவா (சிவில் கோடு: 87052): இந்திய வருவாய் பணியில் 1989ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், நொய்டாவில் மேல்முறையீட்டு ஆணையராக உள்ளார். இவர் மீது இந்திய வருவாய் பணியில் பணியாற்றிய 2 பெண் கமிஷனர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கொடுத்தனர். இவ்விவகாரம் தொடர்பான வழக்கு பல நீதிமன்றங்களை கடந்து வந்தாலும், அவர் அப்பீல் செய்து வைத்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக, இவர் மீது ெதாடுக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 75 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

3. ஹோமி ராஜ்வன்ஸ் (சிவில் கோடு: 85043): வருமான வரித்துறை கமிஷனராக உள்ள இவர், இந்திய வருவாய் பணியில் 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.17 கோடி அளவுக்கு அசையும், அசையா சொத்துகளை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இவரை சிபிஐ ஏற்கனவே கைது செய்ததால், அவ்விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் ஆளானவர். மேலும், ரூ.291 கோடி அளவிற்கு 9 நிறுவனங்களுக்கு விதிமுறை மீறி அனுமதி கொடுத்து முறைகேடு செய்ததாகவும் புகார் உள்ளது. இருந்தும், இவர் மீது தற்போதுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4. பி.பி.ராஜேந்திர பிரசாத் (சிவில் கோடு: 92092): வருமான வரித்துறையில் கமிஷனராக உள்ள இவர் மீது, சிபிஐ (விசாகப்பட்டினம்) முறையீட்டு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக வழக்குபதிவு செய்தது. மேலும், ரூ.2.73 கோடி சொத்து முறைகேடாக வாங்கியதாக குற்றம்சாட்டியது.

5. அஜாய் குமார் சிங் (சிவில் கோடு: 87067): வருமான வரித்துறையில் கமிஷனரான இவர் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் வழக்குப்பதிவு செய்தன. அதனால், கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைக்கு ஆளானார். இவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

6. பி.அருளப்பா (சிவில் கோடு: 90116): வருமான வரித்துறை ஆணையரான பி.அருளப்பா, ரூ. 15.69 கோடி அளவிற்கு வரி செலுத்துதல் தொடர்பாக இழப்பு ஏற்படுத்தியதாகவும், பணியில் சுணக்கத்துடன் செயல்பட்டதாகவும் புகார் உள்ளது.

7. அலோக் குமார் மித்ரா (சிவில் கோடு: 92030): வருமான வரித்துறை கமிஷனரான இவர் மீது, பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் உள்ளன. துறை ரீதியான உத்தரவுகளை போலியாகவும் பிறப்பித்துள்ளார். இவர் மீதும் பல வழக்குள் நிலையில் உள்ளன.

8. சந்தர் ஷைனி பாரதி (சிவில் கோடு: 94086): வருமான வரித்துறை கூடுதல் கமிஷனரான இவரை ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தது. மேலும், தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் ரூ.1.55 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

9. ஆண்டசு ரவிந்தர் (சிவில் கோடு: 91110): கூடுதல் கமிஷனரான இவரை, ரூ.50 லட்சம் கையில் வைத்திருந்தது தொடர்பாக சிபிஐ கைது செய்தது. இவ்விவகாரத்தில், தொழிலதிபரிடம் சில அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தொடர் நடவடிக்கையின் எதிரொலியாக ரூ.81 லட்சம் மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10. விவேக் பாத்ரா (சிவில் கோடு: 92075): வருமான வரித்துறை கூடுதல் கமிஷரான இவர், 2005ம் ஆண்டில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.1.27 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதற்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அவர் சந்தேகத்திற்குரிய பல பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார், கடந்த எட்டு ஆண்டுகளில் 10 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

11. ஸ்வெதப் சுமன் (சிவில் கோடு: 88078) வருமான வரித்துறை கமிஷனரான இவர், 2018ல் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக எழுந்த புகாரில், சிபிஐ மூலம் கைது செய்யப்பட்டார். மேலும், சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். இவர் மீதும் ஏராளமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

12. ராம் குமார் பார்கவா (சிவில் கோடு: 145எப்எப்): வருமான வரித்துறை உதவி கமிஷனரான இவர், டிஆர்ஓ-4, கான்பூரில் பொறுப்பேற்ற போது, குறிப்பிட்ட ஒருவரின் சொத்துகளை விதிமுறை மீறி கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் வழக்கு விசாரணையில் உள்ளன.

மேலும் 123 பேர் மீது நடவடிக்கை

ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள், வருமான வரித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 57 ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு, சட்டீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுத் துறைகளில் தலா ஒரு ஊழல் புகார் நிலுவையில் உள்ளது. மொத்தமாக நாடு முழுவதும் ஊழல் புகாரில் சிக்கிய 123 அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Related Stories: