அமைச்சர் அதிரடி அறிவிப்பு: ஆந்திராவில் மணல் எடுக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது

திருமலை: ஆந்திர மாநிலம் முழுவதும் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக மணல் எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் மணல் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் ஆந்திராவில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணலை கடத்தி வந்தனர். சில இடங்களில் அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மணல் முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி நேற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் கூறியதாவது:

Advertising
Advertising

ஆந்திராவில் தற்போது உள்ள மணல் எடுக்கும் சட்டத்தை ரத்து செய்வதாகவும் இன்று(நேற்று) முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் மணல் எடுக்க தடை விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார். எந்த இடத்திலாவது மணல் எடுத்தால் அல்லது மணலை கடத்தி  கொண்டு செல்ல முயன்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மணலைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய அந்தந்த மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் ஜூலை 1ம் தேதி முதல் மணல் எடுப்பதற்கான புதிய பாலிசி திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டிருப்பதாகவும் சுரங்க துறையின் மூலமாக கடந்தாண்டு ரூ2643 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. மணல் விற்பனையை இலவசமாக அறிவிக்கப்பட்டதால் அரசுக்கு எந்தவித ஆதாயமும் வரவில்லை. இதனால் தனிப்பட்ட நபர்களே லாபம் அடைந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் மணல் விற்பனை மூலமாக 20 சதவீதம் வரை அரசுக்கு வருவாய் கிடைத்து வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் அந்த நிலை ஏற்படவில்லை. எனவே அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் விதமாக மணலை இலவசமாக எடுத்துச் செல்லும் திட்டத்தை ரத்து செய்து வெளிப்படையான ஊழலற்ற முறையில் மணலை அரசே விற்பனை செய்யும். இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் புதிய பாலிசி திட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: