யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக பதிவிட்ட பத்திரிகையாளர் பிரசாந்தை விடுவிக்க அதிரடி உத்தரவு: உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் ‘குட்டு’

புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனே விடுவிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவரை 11 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கனோஜியா சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோதமாக பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டுள்ளார்; உடனடியாக அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேச அரசு தரப்பில் ஆஜராஜ வக்கீல், “பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்தால் அவர் செய்தது உண்மை என்பதுபோல் ஆகிவிடும். இதனால் தடை எதுவும் நீதிமன்றம் விதிக்க கூடாது’’ என்றார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது:  பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்தால் அவர் பதிவிட்டது எப்படி உண்மையாக மாறும் என்பது புரியவில்லை. இதில் அரசு தரப்பில் தவறான தகவல்கள் கூறப்படுகிறது. குறிப்பாக தனிநபருக்கு கருத்து சுதந்திரம் என்பது கண்டிப்பாக உண்டு. இருப்பினும் பல நேரங்களில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டியவை தான். அதனால் அதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்வது என்பதை ஏற்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தையும் , நீதிபதிகளையும் கூட சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அதற்காக கைது என்றால் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பது தெரியாமலே போய்விடும். இதில் பிரசாந்த் கனோஜியா ஒன்றும் கொலை குற்றம் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் லக்னோ உயர் நீதிமன்றம் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். இருப்பினும் இதுதொடர்பான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: