இளம் வீரர்களை ஊக்குவிக்க அஷ்வின் அறக்கட்டளை தொடக்கம்

சென்னை:    திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நட்சத்திர வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ஜென் நெக்ஸ்ட் என்ற பயிற்சி மையத்தை  நடத்தி வருகிறார். இந்த மையம் சென்னையில் 5 இடங்களிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3 இடங்களிலும் செயல்படுகிறது. இதன் தொடர் முயற்சியாக அஷ்வின் அறக்கட்டளை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் இளம் வீரர்கள் 8 பேருக்கு நிதி உதவி, உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், ‘கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறது. அந்த கிரிக்கெட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்ற நோக்கில் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற, ஆர்வமுள்ள சிறுவர்களை திறமையான கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அதன் தொடக்கமாக 8 சிறுவர்களுக்கு உதவித்தொகை வழங்கி உள்ளோம். நானும் பல்வேறு சிரமங்களைக் கடந்து தான் இந்த நிலையை எட்டி உள்ளேன். அதனால் இது போல் இன்னும் நிறைய உதவிகள் செய்யும் திட்டம் உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் அஷ்வின் அறக்கட்டளையின் நிர்வாகி பிரீத்தி அஷ்வின் உடன் இருந்தார்.


× RELATED கொடைக்கானலில் பேரி அறுவடை துவக்கம்