இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் கொல்லாமல் கொல்லும் புகையிலை

மனிதனின் உயிரை மெல்லக் கொல்லும் மாயவி புகையிலை என்று அதை பயன்படுத்துவோரே தெரிந்திருந்தாலும், உலகம் முழுவதும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகையிலைப்பழக்கத்தினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி இறுதியில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. போதைப்பொருள்களில் ஆல்கஹாலைப்போல் நிகோடினும் மோசமானது.  

புகையிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருளான நிகோடினானது, உயிர் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமான சாப்பாடு, குடிநீர் போல தேவை என நரம்பு மண்டலத்தை தூண்டும் வகையில் செயல்படும். இதனால் தான் பலர் குடிப்பழக்த்தைப்போல் புகையிலைப் பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். உலக நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும், இந்தியாவில் சுமார் 51 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  புகை பிடிப்பவர்கள் தங்கள் ஆயுட்காலத்தையும் இழந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கினறனர்.

உலகில் புகையிலை உயயோகிப்பதால் ஆண்டுக்கு சுமார் நாற்பது லட்சம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இறந்ததில் நான்கு லட்சம் பேர் புகைப்பழக்கமே இல்லாதவர்கள். புகைபிடிப்பரை சார்ந்திருப்பதாலேயே அவர்களும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். புகையிலையின் தீமைகளை, அதனால் ஏற்படும் ஆபத்துக்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில், 1988 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே மாதம் 31ஆம் நாளை  உலக புகையிலை ஒழிப்பு தின நாளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டி உலக நாடுகள் இணைந்து கொண்டுவந்த, புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா 2004ம் ஆண்டில் கையெழுத்து இட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது புகையிலை பயன்பாட்டில் 50 சதவீதம் குறைத்துக் கொள்வதாக உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் புகையிலை கட்டப்பாடு சட்டம் கொண்டு வந்தது.

இச்சட்டத்தின் படி, கல்வி நிறுவனங்களைச் சுற்றி புகையிலை பொருட்கள் விற்க தடை, புகையிலை பொருட்களை ஊடகங்களிலும், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் மூலமாக விளம்பரம் செய்ய தடை, புகையிலை பொருட்கள் மீது “புகையிலை புற்றுநோய் உண்டாக்கும்” என்ற எச்சரிக்கை வாசகம் இருக்கவேண்டும். கடைகளில் புகையிலை பொருட்கள் வெளியே தெரியும் வகையில் வைக்க கூடாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தது.

ஆனால் அதை முறையாக நடைமுறைப்படுத்தாததால் இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒருசில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது. 2020 ல் புகையிலை பயன்பாட்டில் 50 சதவீதம் குறைத்துக் கொள்வதாக உறுதியளித்த நம்நாட்டில், புகையிலையின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதேயன்றி குறைந்த பாடில்லை. இதனால் உயிரிழப்போரும் அதிகரித்து வருகின்றனர். புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எனவே புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து அதைப்பயன்படுத்துவோரிடம் விளக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: