தேசிய படைப்பாற்றல் தினம்

‘ஆயக்கலைகள் அறுபத்து நான்கு’

 - என்று சொன்னாலும், நம்மிடம் இருக்கும் ஒன்றிரண்டு கலையை காப்பாற்றி கொண்டு போகவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. நம்மிடம் கதை எழுதும் ஆற்றல் இருக்கலாம். ரசனையுடன் ஓவியத்தை தீட்டும் திறமை இருக்கலாம். ஒரு சிறு உளி, சுத்திக்கொண்டு அழகிய சிலையை செதுக்கும் சிந்தனை இருக்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தட்டிக்கொடுத்து கொண்டாட யாராவது இருந்தால் நாம் எவ்வளவு மகிழ்வோம். அப்படி மிகச்சிறந்த படைப்பாற்றல் திறமை கொண்டவர்களை கொண்டாடுவதே ‘தேசிய படைப்பாற்றல் தினம்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.
Advertising
Advertising

பிரபல திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் ஹல் கிராஸ்மன். ஹாலிவுட் எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். அது மட்டுமல்ல... திரைக்கதையை வடிவமைக்கும் விதம் குறித்தும் ஏராளமான புத்தகங்கள் எழுதி இருக்கிறார். தன்னைப்போல எத்தனையோ பேர் திறமை இருந்தும் வெளியில் வராமல் இருக்கின்றனர். அவர்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல யாருமே இல்லையே என வருந்தினார். இவர்களை அடையாளம் காண்பதற்காகவும், படைப்பாற்றல் திறமை கொண்டவர்களை வெளியில் கொண்டு வருவதற்காகவும், ஒரு நாளை உருவாக்க எண்ணினார். அதுதான் தேசிய படைப்பாற்றல் தினம். கடந்த 2018ம் ஆண்டு முதல் கிராஸ்மன் மனதில் ‘கிராஸ்’ ஆகி இன்று இரண்டாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வருகிறது.

பொதுவாக, எழுத்து, கதை, கட்டுரை, ஒவியம் என பலவித படைப்பாற்றல் முயற்சி எடுப்பவர்கள், தங்களது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடக்கிக் கொள்கின்றனர். அது மிகவும் தவறு. தொடர்ந்து தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டும். மக்களின் கவனத்திற்கு அதை கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் நமது படைப்புகளில், மக்களுக்கு பிடித்தது எது? படைப்பில் சேர்க்க வேண்டியது, நீக்க வேண்டியது எது? என்பது உள்ளிட்ட விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் ஒருவரின் படைப்பாற்றல் திறமையை ஊக்குவிக்கும் மனப்பான்மையும் கட்டாயம் வேண்டும் என்கிறார் ஹல் கிராஸ்மன். அவர் நமக்கு போட்டியாளர் என்று எண்ணக்கூடாது. அதே நேரம் அவரது திறமையை போற்ற வேண்டும். அவரின் மாறுபட்ட முயற்சியை நாம் வேறு விதத்தில் முயற்சித்து பார்க்க வேண்டும். படைப்புகளில் பலவித சம்பவங்களை தொட்டிருக்க வேண்டும். ஒரே எண்ணத்தில், ஒரே சிந்தனையிலே உழன்று கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். வெவ்வேறு தளத்தில், களத்தில் நமது சிந்தனையை செலுத்த வேண்டும். அப்போதுதான் நமது படைப்புகள் பேசப்படும். படைப்பாற்றல் புகழப்படும். ஆகையால் மாத்தி யோசிங்க... புகழ் பெறுங்க...!

Related Stories: