நாளை உலக புகையிலை ஒழிப்பு தினம்... இந்தியாவில் புகைபிடிக்க மட்டும் ஆண்டுக்கு 730 கோடி செலவழிப்பு

வேலூர்: புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. புகை பிடிக்கும் பழக்கத்தால் கேன்சர் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் 2வது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

Advertising
Advertising

இந்நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதுதான் வேதனை. அமெரிக்காவின் புற்றுநோய் ஒழிப்பு கழகம் நடத்திய ஆய்வறிக்கையை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவில் புகை பிடிக்க தினமும் 2 கோடி செலவு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 730 கோடிக்கு மேல் இந்தியர்கள் புகை பிடிக்க செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமானோர் புகை பிடிப்பதாகவும், இவர்களில் 6.25 கோடி பேர் பள்ளி மாணவ, மாணவிகள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற புகையிலை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகி இந்தியாவில் வாரத்துக்கு 17 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. எனவே, புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விலகுவதற்கான விழிப்புணர்வுடன், சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியம். அதன்படி பீடி, சிகரெட் ஆகியவற்றின் அட்டைகள் மீது 70 சதவீதம் விழிப்புணர்வு படங்களை அச்சிட வேண்டும். இந்த படங்களை அனைவரும் பார்க்கும் வகையில், பாக்கெட்டுகளாக மட்டுமே சிகரெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விதிமுறைகள் விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. பஸ் நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களை பார்க்க முடிகிறது. புகையிலை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்று மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். எனவே, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபோன்று பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 100 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், இவைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, புகையிலை ஒழிப்பு தினத்தில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகளை கையாள வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்து அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புகையிலை விற்பனையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: