திருமணத்தில் இணைந்தோம்... இருமனம் ஒத்து வாழ்வோம்... (இன்று உலக தம்பதியர் தினம்)

மனித வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நிகழ்வாக திருமணத்தை குறிப்பிடலாம். அப்படித்தானே எல்லோருக்கும். சரிதானே.. இல்லைன்னு சொல்லி யார் திட்டு வாங்குறது என்கிறீர்களா? ஹஹ்ஹா... இந்திய திருமணங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அது அலங்காநல்லூர் கிராமத்துல நடக்கிற கல்யாணமாய் இருந்தாலும் சரி.. அம்பானி வீட்டு கல்யாணமாக இருந்தாலும் சரி... ஊராரை அழைத்து, விருந்து படைத்து, மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் இந்தியர்களுக்கு நிகராக யாரையாவது கூற முடியுமா? அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாற வேண்டும். தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

Advertising
Advertising

இந்த நாளில் என்னதான் செய்வார்களாம். சில நாடுகளில் இன்று விடுமுறையே வழங்குகிறார்களாம். தம்பதிக்கு டூர் பேக்கேஜ் போட்டுக் கொடுத்து விடுவார்களாம். ஜாலியாக சுற்றுலா சென்ற இடத்தில் கேக் வெட்டி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவார்களாம். டூரில் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. தம்பதி விருப்பப்பட்டால் அழைத்து செல்லலாம். ஏன் குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாததா என்ன? ஆங்.. அதேதான். என்னதான் இந்திய திருமணங்களை நாம் பெருமையாக பேசினாலும், இந்தியாவில் திருமணம் செய்யும் தம்பதியினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது வருத்தத்தை அளிக்கிறது. கடந்த 2017 வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 511 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 21,672 விவாகரத்து வழக்குகளுடன் தமிழகம் 12வது இடத்தில் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,200 விவாகரத்து வழக்குகள் புதிதாக பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவாகரத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? வெளிநாடுகளில் கொண்டாடி வந்த சிறப்பு தினங்களை, நாமும் ஏன் கொண்டாடி தீர்க்கிறோம் என்பது இப்போதாவது புரிகிறதா? புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தோம். அங்கு முடிவுகள் கலந்து எடுக்கப்படும். பிரச்னைகளையும் எளிதில் சரி செய்யலாம். பணிகளும் பகிரப்படும். இப்போது தனித்து வாழும் தம்பதி தங்களுக்குள் ஒரு பிரச்னை வந்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே பிரிந்து வாழ்வோம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். நீதிமன்றங்கள் சேர்த்து வைக்க முயன்றாலும், பிடிவாதமாக பிரிவதே தீர்வு என திருமண பந்தத்தை முறித்துக் கொள்கின்றனர். மனம் ஒத்து வாழ்ந்தால் எந்த பிரச்னைகளையும் எளிதில் சமாளிக்கலாம். அதைத்தான் இந்த தம்பதியர் தினமும் உணர்த்துகிறது.

Related Stories: