×

ஜூன் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் மேற்கு கடற்கரையில் மீன்பிடிக்க தடை

குளச்சல்: கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்ன முட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த தடை வரும் ஜூன் 15ம் தேதி நள்ளிரவு முதல் நீங்குகிறது. இந்த நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி உள்பட 40 கடலோர கிராமங்களில் ஜூன் 1ம் தேதி முதல் தடை தொடங்குகிறது. ஜூலை 31ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த 60 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது.

இது குறித்து குளச்சல் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் விசைப்படகுகளுக்கு அறிவுறுத்திவுள்ளது. இதையடுத்து ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குமரி விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. கேரள கடல் பகுதியும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ளதால் அங்கு சென்றுள்ள குமரி விசைப்படகினர் படகுகளை அங்கேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது, வலை போன்ற உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

Tags : west coast , Keyboards, West Coast, Fishing Barrier
× RELATED ரயிலில் இருந்து பெண் இன்ஸ்பெக்டரை தள்ளிவிட முயன்ற டிக்கெட் பரிசோதகர்