×

எளிய எம்பியை தேர்ந்தெடுத்ததற்காக பாலசோர் தொகுதி மக்களுக்கு குவியும் பாராட்டு: சைக்கிள், ஆட்டோவில் பிரசாரம் செய்து சாதனை

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீபிரதாப் சந்திர சாரங்கி (64). திருமணம் செய்துகொள்ளாத இவரின் தாய் கடந்தாண்டுதான் இறந்தார். மற்ற குடும்ப உறவுகள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மண் குடிசையில் சாதாரண வாழ்க்கை நடத்தி வரும் இவர், மது, ஊழல், போலீஸ் அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருபவர். இதனால், பாலசோர், மயூர்பன்ஜி மாவட்டங்களில் அவரது சேவை பரவியது. மக்களின் நன்மதிப்பை பெற்ற அவரை, ஒடிசா மக்கள் ‘அண்ணன்’ ஸ்ரீபிரதாப் சந்திர சாரங்கி என்று செல்லமாக அழைக்கின்றனர். ஏற்கனவே 2 முறைஎம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இந்த முறை மக்களவை தேர்தலில் பாஜ கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

 அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தளம் வேட்பாளர் ரவீந்திர குமார் ஜனாவை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கட்சிகளில் சீட்டு வாங்க பல நூறு கோடி செலவு செய்யும் இந்த காலத்தில், பாஜவின் சார்பாக எம்பியாக ஒருவரை, அப்பகுதிமக்கள் தேர்வு செய்திருப்பது சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டப்பட்டு வருகின்றன. இவரின் எளிமையான வாழ்க்கையை பார்த்து அப்பகுதி மக்கள் இவரை ‘ஒடிசாவின் மோடி’ என்றும் அழைக்கின்றனர். எங்கும் சென்றாலும் சைக்கிள் பயணம்தான். தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் கூட சைக்கிள், ஆட்டோவில் சென்றுதான் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.

இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி, ஒரு மடத்தில் சந்நியாசியாக சேர விரும்பியபோது, அவரை குறித்து விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என்பதால், அவரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர். இதனால், சந்நியாசி வாழ்க்கையை, மக்களுடன் பகிர்ந்து கொண்டு, இன்று ஒரு தொகுதியின் எம்பியாகி உள்ளார். இவரது வெற்றியை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பிரபலங்கள், ‘டெல்லியில் நாடாளுமன்றம் உங்களை வரவேற்கிறது’ என்று வலைதளங்களில் வாழ்த்தினர். ஒடிசாவின் இந்த எளிமையான, ஏழை எம்பியை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர்.



Tags : auto campaigning ,Balasore , Simple MP, Balasore Volume, People, Cycle, Auto Promotion, Adventure
× RELATED ஆகாஷ் ஏவுகணை சோதனை