பழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்

பழநி: விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. சாமி தரிசனத்திற்கு 2 மணிநேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையின் காரணமாக பழநி கோயிலில் நேற்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

பக்தர்கள் வந்த வாகனம் அடிவார பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்புறத்தை சாலைவரை நீட்டித்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. விடுமுறை காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டுமென்றும், அடிவார பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: