மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் எனப்படும் கேரி பேக்குகள், டீ கப்புகள், கடைகளில் பொருட்களை வைத்து கொடுக்க பயன்படுத்தும் பைகளுக்கு கடந்த ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆங்காங்கே அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சில நாட்கள் பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தினர். அதன்பின் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து தனிகுழுக்கள் அமைத்து கடந்து சில மாதமாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர், பெருமாநல்லூர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 300 கிலோ அளவு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கயம்: காங்கயம் ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை, பரஞ்சேர்வழி, மரவபாளையம், நத்தக்காடையூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காங்கயம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமாரசாமிராஜா, ஹரிசங்கர், சந்திரா, செல்வநாயகி தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 183 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய வர்த்தக நிறுவனத்திடமிருந்து ரூ.5 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது. முன்னதாக நீர்நிலைகள் மாசு படுவதுடன், தெருவில் வீசப்படும் பிளாஸ்டிக் கலந்த குப்பை உணவுகளை கால்நடைகள் சாப்பிடுவதால் ஆபத்து ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: