கஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

பேராவூரணி: கஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் பூக்கள் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு இயற்கை வாசனை மாறியதால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்த்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள களத்தூர், பைங்கால், சித்தாதிக்காடு, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளான மேற்பனைக்காடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, மறமடக்கி, திருநாலூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் குறிப்பாக மல்லிகை, முல்லை, சாமந்தி, அரளி, செண்டி, ரோஜா மலர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, கடந்த 6 மாத காலமாக மழை இல்லாததாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி வீசிய கஜா புயல் காரணமாகவும் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. தற்போது, தேவை குறைவாக இருப்பதால் விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து மலர் சாகுபடி செய்யும் செரியலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பகவத்சிங் கூறியதாவது: கஜா புயலினால் மலர்செடிகள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. புயலுக்கு பின்னர் பூச்சி தாக்குதல் காரணமாக மஞ்சள் நிறத்தில் செடிகள் மாறிவிட்டது. போதிய மழை இல்லாததாலும், புயலுக்கு பிந்தைய இயற்கை மாற்றத்தாலும் மலர்கள் போதிய அளவு வளர்ச்சி இன்றி உள்ளது. தற்போது விளையும் மலர்கள் அதன் இயல்பான வாசனையின்றி போய்விட்டது. பூச்சி தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து பூச்சி மருந்து தெளிக்க வேண்டியுள்ளது. 10 கிலோ மலர் விளைவிக்கவே 600 முதல் 800 வரை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பூப் பறிக்க கிலோவிற்கு 30 முதல் 50 வரை தொழிலாளிகளுக்கு கூலி தர வேண்டி உள்ளது. ஒரு கிலோ பூ உற்பத்திக்கு 100 வரை செலவு செய்தும், சந்தையில் 100க்கு மேல் விற்க முடிவதில்லை. திருவிழா, முகூர்த்த காலங்களில் மட்டுமே ஓரளவிற்கு விலை கிடைக்கும். தோட்டக்கலை துறை அலுவலர்கள் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வேறு தொழில் தெரியாமலேயே, எந்த லாபமும் இன்றி, இதே மலர் உற்பத்தி தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பூ மொத்த விற்பனையாளர் கீரமங்கலம் செல்வராஜ் கூறுகையில், ‘‘கஜா புயலில் வளர்ந்த செடிகளின் வேர்கள், பூமியை விட்டு வெளியே வந்து விட்டது. விவசாயிகள் பாடுபட்டும் பலனின்றி போனது. பூக்கள் சிறுத்து, வாசனையின்றி விளைவதாலும், தற்போது சீசன் இல்லாமல் இருப்பதாலும், திரட்சியான மதுரை மல்லி வரத்தாலும், இங்கு உற்பத்தி செய்யும் மலர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்த உற்பத்தி, தேவை குறைவு காரணமாக விவசாயிகள் போலவே, மொத்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்றார். பேராவூரணியில் சில்லறையில் விற்பனை செய்து வரும் வியாபாரி நீலகண்டன் கூறியதாவது: உதிரியாக மல்லிகைப்பூ, முல்லைப்பூ 100 கிராம் 20 என்ற விலையில் விற்பனை ஆகிறது. தொடுக்கப்பட்ட பூ முழம் 15க்கு விற்கிறோம். ரோஜாப்பூ வரத்து சுத்தமாக நின்று விட்டது. உதிரிப்பூ 5 முதல் 10 கிலோ விற்கும். சமயத்தில் உதிரிப்பூ மலர்ந்து விட்டால் விற்பனை செய்ய முடியாது. விலை குறைத்து தான் விற்போம். தற்போது விற்பனை மந்தமாகவே உள்ளது’’ என்றார். கஜா புயலுக்கு பின்னர் இயற்கையை நம்பிய எல்லோரும் பாதிக்கப்பட்டதைப்போல மலர் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதன் என்னதான் முயற்சி செய்தாலும் இழந்ததை திரும்ப தர இயற்கையால்தான் முடியும்.

Related Stories: