நகர் முழுவதும் மரங்களை வளர்த்து திருப்புத்தூரை பசுமையாக்கும் இளைஞர்கள்

திருப்புத்தூர் : திருப்புத்தூரை பசுமை நகராக்கும் முயற்சியில் நகர் முழுவதும் மரங்களை நடும் பணியில் பசுமை பாரதம் அமைப்பினர் இறங்கியுள்ளனர். திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற வசந்தப்பெருவிழாவில் சந்தித்த நண்பர்கள் சிலர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி மரம் நட திட்டமிட்டனர். அதன்படி திருப்புத்தூர் முழுவதும் மரக்கன்றுகளை நட எடுத்த முடிவுதான் பசுமை பாரதம் அமைப்பு. அதன்படி பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாக்குழுத்தலைவர் என்.ஏ.ஆர்.தங்கவேலு மூன்று வராத்திற்கு முன் முதல் மரக்கன்றை வைத்து துவக்கி வைத்தார்.

alignment=

பின்னர் தொடர்ந்து திருப்புத்தூரில் கடந்த சில வாரங்களில் பூமாயி அம்மன் கோவில் வீதி, கண்டரமாணிக்கம் ரோடு, மஞ்சுளா தியேட்டர் ரோடு, புதுக்கோட்டை ரோடு, அஞ்சலக வீதி, தேரடி வீதி, மதுரை ரோடு, கல்லூரிச்சாலை, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். அதன் பாதுகாப்பு வளையத்தில் பசுமை பாரதம் என்று பெயரிட்டுள்ளனர். டாங்கர் லாரி மூலம் அவர்களே தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

திருப்புத்தூர் நகரில் பரவலாக மரக்கன்றுகள் நட்டு நகரை பசுமை நகராக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகசிதம்பரம், சிவசாமி, மீனாட்சிக்குமார் ஆகியோருக்கு டாங்கரில் தண்ணீர் வழங்கி ஆர்.எம்.எம்.குரூப் பாலா, ஸ்பான்சர்களை தரும் இன்ஜினியர் அருணாச்சலம், ராமசாமி, மரக்கன்றுகள் வழங்கிய சகுந்தலை அம்மாள் டிரஸ்ட் ஆறுமுகராஜன், குளோபல் இன்டர்நேஷனல் ஸ்கூல், செட்டிநாடு பள்ளி என்று பலரும் உற்சாகமளித்தனர்.

வனத்துறையினரும் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இதையயடுத்து குறுகிய காலத்தில் 400க்கும் அதிகமான வேம்பு, புங்கன், அத்தி, அரசு, சிவப்பு பூ மரங்கள் நட்டு அதற்கான பாதுகாப்புக் கூண்டுகளையும் அமைத்துள்ளனர். மரம் நடும் பகுதியில் உள்ளவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, அவர்களையே நடச்சொல்லி உற்சாகப்படும் இந்த இளைஞர்கள் மதுரை ரோடு, காளியம்மன் கோயில் ரோடு, காவலர் குடியிருப்பு, தம்பிபட்டி பகுதிகளிலும் மரங்கள் நட்டு வருகின்றனர்.

மேலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அழைத்தாலும் அப்பகுதிக்கு சென்று இவர்களே தேவையான மரக்கன்றுகளை நடுகின்றனர். மேலும் இவர்களை உற்சாகப்படுத்த இவர்களுக்கு மரக்கன்றுகள், கூண்டுகள், பராமரித்தல் போன்றவற்றில் உதவ நினைத்தால் செல்: 98424 55688, 98421 48651, 99421 32328, 95976 23498 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: