இலங்கை படகு அருகே வாக்கி டாக்கி கிடந்த விவகாரம் 6 மீனவர்களை வேனில் ஏற்றி செல்ல முயன்ற ஆந்திர போலீஸ்

* சோதனை சாவடியில் மடக்கியது தமிழக போலீஸ்

* கியூ பிராஞ்ச், உளவுத்துறை விசாரணை


வேதாரண்யம்: ஆந்திராவில் இலங்கை படகு அருகே வேதை மீனவரின் வாக்கி டாக்கி கிடந்த விவகாரம் தொடர்பாக 6 மீனவர்களை சினிமா பாணியில் கொண்டு செல்ல முயன்ற ஆந்திர போலீசை சோதனை சாவடியில் நாகை போலீசார்  மடக்கி பிடித்தனர். மீட்கப்பட்ட 6 மீனவர்களிடம் கியூ பிராஞ்ச், உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஆந்திர மாநிலம் தெலுங்கானா மாவட்டம் கிருஷ்ணாபட்டினம் என்ற இடத்தில் கடந்த 18ம் தேதி இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து கிருஷ்ணாபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, படகு  நின்றிருந்த இடத்தில் வாக்கிடாக்கியை ஆந்திர போலீசார் கைப்பற்றினர். பின்னர், வாக்கிடாக்கியை போலீசார் ஆன் செய்து பார்த்தபோது வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆனந்த்  (49) என்பவருக்கு சொந்தமானது என்று  தெரியவந்தது.  இதையடுத்து, ஆந்திர போலீசார் நேற்று காலை ஆறுகாட்டுத்துறை வந்து ஆனந்த், சசிகுமார், ஈஸ்வரன்,  நாத், சத்தியகுருபலம், அருண்குமார், ஈஸ்வரன் ஆகிய 6 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை  ஆந்திரா கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது, ‘‘அவர்களை தடுத்த கிராம மக்கள் எவ்வித வழக்கும் இல்லாமல் கொண்டு செல்லச்கூடாது. எழுதி கொடுத்துவிட்டு கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த  ஆந்திர போலீசார் நாகை  மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக கூறி 6 பேரையும் அவர்கள் வந்த போலீஸ் வேனில் கொண்டு செல்லாமல் தமிழ்நாடு பதிவெண் கொண்ட வேனில் காரைக்கால்  வழியாக ஆந்திரா கொண்டு செல்ல முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீனவர்கள், நாகை எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து, அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.  இதன்பேரில், பொறையாறு சோதனை சாவடி வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது, 6 மீனவர்களும் ஆந்திரா போலீசாரும் இருந்தது தெரிந்தது. பின்னர், மீனவர்களிடமும் ஆந்திர போலீசாரிடமும் விசாரணை செய்தனர். அப்போது, வரும் 29ம் தேதி ஆந்திராவுக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று ஆந்திர போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் விசாரணைக்கு வர  ஒப்புக்கொண்டு கடிதம் எழுதி கொடுத்தனர். இதன்பின், ஆந்திர போலீசார் திரும்பி சென்றனர். எனினும், கரை ஒதுங்கிய இலங்கை படகின் அருகே ஆறுகாட்டுத்துறை வாக்கிடாக்கி எப்படி வந்தது என்பது குறித்து கியூ பிராஞ்ச் போலீசாரும்,  உளவுத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.× RELATED இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை