×

2 பொதுத்தேர்தலிலும் த.மா.கா. பூஜ்யம்: நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வு

திருச்சி: தமாகா சந்தித்த 2 பொது தேர்தலிலும் தோல்வி அடைந்ததால், நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2014ல் அக்கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் 2016ல் நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுடன்  கூட்டணி அமைத்து போட்டியிட வாசன் விரும்பினார். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால், அதை ஏற்காத வாசன் கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். அப்போது, 24  தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, ஒரு இடத்தில் கூட ெவற்றி பெறவில்லை.இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக- பாஜ கூட்டணியில் தமாகா இணைந்தது. அந்த கட்சிக்கு தஞ்சை மக்களவை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட தமாகா வேட்பாளர்  நடராஜன் தோல்வியை தழுவினார். தமாகா சந்தித்த 2 பொது தேர்தல்களிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல், வெற்றிக்கணக்கை தொடங்காமல் உள்ளது. இது தமாகா நிர்வாகிகள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி  உள்ளது.

வாசனின் தந்தை மூப்பனாரும் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், கடந்த 1996ல் தமாகாவை தொடங்கினார். அந்த வருடம் நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமாகா 39 எம்எல்ஏ சீட், 20 எம்பி சீட்களை  பிடித்தது. 1998ல் நடந்த தேர்தலில் 3 மக்களவை தொகுதிகளில் தமாகா வென்றது. பின்னர் 2001 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமாகா 22 சட்டமன்ற தொகுதிகளில் ெவற்றி பெற்றது. அதன்பிறகு மூப்பனார் காலமானதால், தமாகாவை வாசன் காங்கிரசோடு இணைத்தார். அப்பா போல் தனிக்கட்சி  துவங்கி, வாசனால் ஜொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால் கட்சி கரை சேருவது கடினம் என்று தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.




Tags : Elections ,Administrators ,volunteers , general ,election, Tamaka Zero, Administrators, volunteers , fatigued
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...