×

மதுரை தொகுதியில் மக்கள் அதிர்ச்சி ஓட்டுக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் அதிமுகவினர்

மதுரை: மதுரை மக்களவை தொகுதியில் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், அதிமுகவினர் பணத்தை திரும்பக் கேட்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசனும், அதிமுக சார்பில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனும், அமமுக சார்பில் டேவிட் அண்ணாத்துரை மற்றும் மநீம, நாம்  தமிழர் கட்சி சார்பிலும், சுயேச்சைகளாகவும் வேட்பாளர்கள் களம் இறங்கினர். தேர்தல் அறிவித்து மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்குஒதுக்கியதும் எளிதில் வெற்றி பெறலாம் என திட்டமிட்டு தன் மகனுக்கு ராஜன்  செல்லப்பா சீட் வாங்கினார்.மகனின் வெற்றிக்காக, ராஜன்செல்லப்பா  ஒரு குழுவை அமைத்து மதுரை  மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 80 சதவீதம்  வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ₹300 வீதம் கொடுக்க, அந்த குழுவிடம் பணம் கொடுத்ததாக  கூறப்படுகிறது. ஆனால், பணம் பெற்ற குழுவினர் ஒரு சிலருக்கு மட்டும் பணம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.  தேர்தல் அன்று எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் உயரவில்லை.

அமமுக ஓட்டுகளை பிரித்தாலும், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என ராஜன்செல்லப்பா, அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள்  அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் 1 லட்சத்து 39 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை தோற்கடித்தார். இதனால், ராஜன் செல்லப்பா அதிர்ச்சியடைந்து,  அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று அதிமுக வேட்பாளர் தொடக்கம் முதலே, பின்னடைவை சந்தித்தார். இதனால், ஆத்திரமடைந்து, கட்சி நிர்வாகிகளை அழைத்து, கொடுத்த  பணத்தை திரும்பக் கொடுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, அதிமுகவினர், வாக்குச்சாவடி வாரியாக எத்தனை ஓட்டுகள் பதிவாகின. இதில், எந்த வாக்காளருக்கு பணம் கொடுத்தோம். அவர்கள் அனைவரும் ஓட்டு  போட்டார்களா என கணக்கெடுத்தனர். பணம் வாங்கி விட்டு ஓட்டு போடாதவர்களிடம் சென்று, பணத்தை திரும்பக் கொடுங்கள் வேட்பாளருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஓட்டுப்போடுவதாக பணம் வாங்கியவர்கள் பலர் ஓட்டுப் போடவில்லை. ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுகளுக்கு பணம் கொடுத்தோம். அதில் 2 பேர் மட்டும் ஓட்டு போட்டுள்ளனர். பாக்கியுள்ள 2  பேரின் பணத்தை அவர்களிடம் திரும்பக் கேட்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள், ஓட்டு விபரத்தை கையில் வைத்துக்கொண்டு எங்களிடம் கணக்கு கேட்பதால், நாங்கள் பணத்தை திரும்ப கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுகளுக்கு பணம் கொடுத்தோம். அதில் 2 பேர் மட்டும் ஓட்டு போட்டுள்ளனர். பாக்கியுள்ள 2 பேரின் பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்கிறோம்




Tags : constituency ,Madurai , People , Madurai, constituency, paid,AIADMK
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...