நீரை சேமித்தால் 400 அடி போர்வெல் தேவையில்லை: சுரேஷ், மழை நீர் சேகரிப்பு ஆர்வலர்

மழைநீர் வீணாவதை கண்டு வேதனை அடைந்த நாட்கள் உண்டு. அதன் பின் தான், சிலரின் ஆலோசனையின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தேன். அதன் பலன் தான் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கியது. இந்த மழை நீர் சேகரிப்பு  கட்டமைப்பை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே அமைத்தேன். அதன் பிறகு தான் தமிழக அரசே அதன் அவசியத்தை உணர்ந்தது.  நான் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்ததற்கு முக்கிய காரணம் தண்ணீர் என்பது இயற்கையின் கொடை என்று எண்ணியது தான். அதை நாம் வீணாக்குவதை விட சேமித்து வைக்கலாமே என்று யோசித்தேன். கடந்த காலங்களில்  வீடுகளில் தண்ணீர் பாத்திரத்தை பிடித்து தேக்கி வைப்பார்கள். அதே போன்று, நாம் ஏன் செய்யக்கூடாது. எனது வீடுகளில் மொட்டை மாடி இருக்கிறது. அதன்வழியாக நான் மழை நீரை பைப் மூலம் கொண்டு வந்துள்ளேன். அவ்வாறு வரும் நீரை அழுக்கு வராமல் இருக்க நான் பில்டர் செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். அதாவது மணல், கூழாங்கற்கள் என்று மூன்று அடுக்குகளாக வைத்து உருவாக்கி, அந்த இடத்தில்  அந்த தண்ணீரை பில்டர் செய்தேன். இதன்பின்  குழாய் மூலம் அந்த மழை நீரை  தொட்டியில் சேமித்தேன்; இந்த தண்ணீர் அப்படியே கண்ணாடி போல பளீச் என்று இருக்கும். சுவையாகவும் இருக்கும். டம்ளரில்  எடுத்து அப்படியே குடிக்கலாம். அந்த சுத்தமான தண்ணீரை தொடர்ந்து பிடித்து  வைப்பேன். மீதமுள்ள தண்ணீரை கிணற்றில் விட்டுவிடுவேன். ஒரு மழைக்கு 50 முதல் 60 லிட்டர் தண்ணீர் வரை கிடைக்கும். கடந்த வருடம் சரியாக மழை இல்லை. நான் 25 வருடமாக இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்தல்  இப்போது வரை எங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் மட்டம் குறையவே இல்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 12 வருடங்களுக்கு முன்னர் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என்று உத்தரவிட்டார். ஆரம்பத்தில் இதை சரியாக செய்தவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிலர் ஏதோ வைக்க வேண்டும் என்பதற்காக  மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்துள்ளனர். ஒவ்வொரு வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும். நாங்கள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிப்பது மிகவும் எளிது தான். இந்த வருடம் செப்டம்பர்  காலத்தில் மழை பெய்யும். அதற்கு முன்னதாக இந்த கட்டமைப்பை வைத்தால் ஒவ்வொரு வீடுகளுக்கும் பலன் கிடைக்கும். ஒரு நாள் மழை பெய்தால் கூட 5 வருடங்கள் தண்ணீர் கிடைக்கும்.அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் என அனைத்து இடங்களில் இந்த கட்டமைப்பை வைத்திருக்க வேண்டும். மொட்டை மாடியில் எந்த இடத்தில் தண்ணீர் விழுகிறது என்று பார்த்து வைத்தால் கூட போதுமானது. இப்போது எனது வீட்டில்  15 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். எல்லோரும் இந்த கட்டமைப்பை வைத்தால் அவர்கள் 400 அடி போர்வெல் அமைத்து தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்காது. சில அடிகளிலேயே தண்ணீரை மக்களால் பெற முடியும். எனவே,  அனைவருக்கும் பயனான இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை மக்கள் வைக்க வேண்டும். அப்போது என்னை போன்று எல்லோரும் பயன்பெற முடியும். மழை இல்லாத காலகட்டத்தில் கூட நிலத்தடி நீரை பயன்படுத்தி நமது தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த கட்டமைப்பை வைத்தால் ஒவ்வொரு வீடுகளுக்கும் பலன் கிடைக்கும். ஒரு நாள் மழை பெய்தால் கூட 5 வருடங்கள் தண்ணீர் கிடைக்கும்.
Tags : Suresh ,rain water collector enthusiast , Save water, 400 feet ,bore, Suresh,
× RELATED திருச்சி நகைக்கொள்ளை வழக்கில்...