கொட்டிய மழைநீரை சேமிக்காமல் அரசே கடலில் விடுவது கொடுமை: சேகர் ராகவன், தன்னார்வ தொண்டு அமைப்பு இயக்குனர்

கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழை இல்லம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, இரண்டு மாதத்திலேயே ஜெயலலிதா ஒரு சட்டம்  கொண்டு வந்தார். பழைய  வீடாக இருந்தாலும், புது வீடாக இருந்தாலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை வைக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும், இந்த கட்டமைப்பை அமைக்க ஒரு வருடம் கால அவகாசம் கொடுத்தார்.  மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பில்டர்களிடமும், மழை நீர் சேகரிப்பை நகர்புறங்களில் எப்படி செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், செய்வதற்கு எவ்வளவு  செலவாகும் என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மழை இரண்டு இடத்தில் பெய்யும். ஒன்று மொட்டை மாடியில், இன்னொன்று வீட்டை சுற்றி பெய்யும். மொட்டை மாடியில் மழை பெய்யும் போது, ஒரு குழாய் மூலம் கீழே கொண்டு வந்து, வீட்டில் ஒரு கிணறு இருந்தால் திருப்பி விட்டு  நிலத்தடி நீராக சேமிக்கலாம். வீட்டில் கிணறு இல்லை என்றால் உறை கிணறு போல் அமைத்து பெய்கிற மழை நீரை சேமிக்கலாம். சிலருக்கு தொட்டியில் இணைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படியும் சேமிக்கலாம்.

வீட்டை சுற்றி பெய்யும் மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பில் கேட் வழியாக தெருவுக்கு போய் விடும். அந்த மழை நீரை கேட் வழியாக செல்லாமல் அதை தடுத்து உறை கிணறுக்கு அனுப்பி விடுவோம். சராசரியாக 3 அடி அகலத்தில் 15 அடி  ஆழத்தில் உறைகிணறு அமைப்போம். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் மூடி போட்டு கொடுப்போம். பாதுகாப்பிற்காக அந்த மூடி போட்டு கொடுப்போம். நாங்கள் இதுவரை 3 ஆயிரம் வீடுகள் வரை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்து  கொடுத்துள்ளோம்.  சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் கட்டுகிறது. எங்கு களிமண்ணாக இருக்கிறதோ அங்கே மழை நீர் வடிகால் கட்ட வேண்டும். பெசன்ட் நகர் மணல் பாங்கான பகுதி. அங்கு மழை நீர் அப்படியே பூமிக்கு போய் விடும். அங்கு மழை நீர்  வடிகால் கட்டி அதை கடலில் விடுகின்றனர். இது தவறான செயல். ஒரு பக்கம் மழை நீர் சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர்களே கடலில் விடுவது தான் கொடுமை. நிலத்தடி நீரை சேமித்தால் தான் தண்ணீர்  பிரச்னை வராது. போன வருடம் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. அதே நேரம் 2015ல் மழை நன்றாக பெய்தது. அந்த மழை நீரை கடலில் போய் விட்டுவிட்டோம். மாநகராட்சிக்கு நீண்டகால திட்டம் இல்லை. அவர்கள் இந்த வருடம்  என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு அடுத்த வருடம் என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர்.

நாராயணபுரம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், ரெட்டேரி உள்ளிட்ட ஏரிகளில் கழிவு நீர் விடுகிறோம். பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிக்கினறனர். நீர் நிலைகள் நீர்நிலைகளாகவே இருக்க வேண்டும். இதை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அதே  நேரத்தில் பொதுமக்கள் மழை நீரை சேகரிக்க வேண்டும். கஷ்டம் வரும் போது இதை பேசுகிறோம். அதன்பிறகு இதை மறந்து விடுகிறோம். அப்படிஇல்லாமல், எந்தகாலத்திலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் என்பதை மக்கள் உணர  வேண்டும்.ஒரு பக்கம் மழை நீர் சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் மழைநீரை அவர்களே கடலில் விடுவது தான் கொடுமை. நிலத்தடி நீரை சேமித்தால் தான் தண்ணீர் பிரச்னை வராது.

Related Stories: