×

ஐஎஸ் தீவிரவாதிகள் படகில் வருவதாக எச்சரிக்கை கேரள கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு: 2வது நாளாக கடற்படை அலர்ட்

திருவனந்தபுரம், : இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் படகில்  வருவதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் கேரள கடல்  எல்லை முழுவதும் கடற்படையை சேர்ந்த 5 கப்பல்கள்,  டோர்னியர் விமானங்களும்  கண்காணிப்பில் ஈடுபட்டன.இலங்கையில் இந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று நடந்த  குண்டு வெடிப்பில் 256 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தமிழ்நாடு,  கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  இந்நிலையில், இலங்கையில்  இருந்து இந்திய மாநிலங்களை நோக்கியும், லட்சத்தீவை  நோக்கியும் 15 பேர் அடங்கிய ஐஎஸ் தீவிரவாதிகள், ஒரு படகில் புறப்பட்டு  உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று  முன்தினம் முதல்  கேரள கடல் எல்லை முழுவதும் தீவிர பாதுகாப்பு  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 2வது நாளாக  கேரள கடல் எல்லையில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர  பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கொச்சி கடற்படையைச் சேர்ந்த  5க்கும் மேற்பட்ட கப்பல்களும், டோர்னியர்  விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.இதுகுறித்து விழிஞ்ஞம் கடலோர  பாதுகாப்பு படை கமாண்டர் வர்க்கிஸ் கூறுகையில், ‘‘கடந்த 2 தினங்களாக கேரள  கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்  தீவிரவாதிகள் லட்சத்தீவில் உள்ள மினிகாய்  நோக்கி வந்து கொண்டிருப்பதாக  உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படை  உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகிறோம்,’’ என்றார்.சந்தேக படகு மடக்கி பிடிப்பு: இதற்கிடையே,  எர்ணாகுளம் அருகே முனம்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற படகை விரட்டி கடலோர பாதுகாப்பு படை சோதனையிட்டதில், அது சாதாரண மீன்பிடி படகு என   தெரியவந்தது.




Tags : militants ,ISS ,Kerala , Warning , IS terrorists, Kerala ,Sea ,Area,
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி