மத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் அதிமுகவை சுக்குநூறாக உடைப்பேன்: வைத்திலிங்கம் மிரட்டல்; ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சு

சென்னை: “மத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2011ல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பி.பழனியப்பன் ஆகியோர் கொண்ட ஐவர் அணி இருந்தது. இவர்கள், முக்கிய முடிவை  எடுத்து செயல்படுத்தி வந்தனர். அவர்கள் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தனர். ஜெயலலிதாவின் அறிவுரைப்படி கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016ல்  சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இருப்பினும் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவை எம்பி பொறுப்பையும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் வழங்கி கவுரவித்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதா, வைத்திலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 2016 டிசம்பரில் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதன்பிறகு, சசிகலா, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. அப்போது கூட சசிகலா அணியில் தான் இருந்தார். இந்த நிலையில் சசிகலா  சிறை சென்ற பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அப்போது கூட இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி மீண்டும் இணைந்தது.  அதன்பிறகு கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் ெசயல்பட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில்  முடிவெடுக்குக்கும் குழுவிலும் முக்கிய நபராக உள்ளார்.

இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் ஆலோசனையின் படி தான் டெல்டா மாவட்டங்களில் இபிஎஸ் வேட்பாளரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் இம்முறை பாஜவுடன் கூட்டணி  அமைத்து போட்டியிட்டதால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன்  ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓபிஎஸ் டெல்லி பாஜக தலைமையை அணுகி வருகிறார்.இதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒன்று அல்லது 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியும் கோரிக்கை வைத்துள்ளார்.இதற்கிடையே ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் போர்க்கொடிதூக்கியுள்ளனர். மாநிலங்களவை எம்பியாக வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் வைத்திலிங்கம் சீனியர். அவருக்கு அமைச்சர் பதவி கேட்டும், ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என  எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றார். ஆனால், ஓபிஎஸ் தனது மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் சுக்குநூறாக கட்சியை உடைப்பேன் என்று வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன்  ரகசிய பேச்சும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வைத்திலிங்கமும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் கட்சியை உடைத்தால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக காணாமல் போகும் நிலை ஏற்படும். இது, இபிஎஸ்சுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.× RELATED ம.பி.யில் கொலை முயற்சி, வன்முறை வழக்கு மத்திய அமைச்சரின் மகன் கைது