பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் செயல் திட்டத்தை சமர்ப்பிக்க தவறிய தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள்: மாதம் 1 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும்

புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க தவறிய தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள், மாதம் தலா ₹1 கோடி இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன.  சுற்றுச்சூழல் கேடுக்கு பிளாஸ்டிக் முக்கிய காரணியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கேரி பேக் உட்பட சில வகை பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. அதோடு, பிளாஸ்டிக்  கழிவுகளை அழிப்பதிலும்  கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆந்திரா, புதுச்சேரி, சிக்கிம், மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்கள், பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. எனவே, திட்டத்தை சமர்ப்பிக்காத 25 மாநிலங்கள், அவற்றை ஏப்ரல் 30ம்  தேதிக்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.  ஆனால், கெடு தேதி முடிந்தும் தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள் செயல்திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. இவற்றில் அந்தமான் நிகோபர், அருணாசல பிரதேசம், சண்டிகார், சட்டீஸ்கர், டாமன் டையூ, தாத்ரா நகர் ஹவேலி, டெல்லி, ஹரியானா  இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, லட்சத்தீவு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்கள்  பிளாஸ்டிக்  பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. ஆனால், இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சில நகரங்களில் அவை பயன்பாட்டில் உள்ளன. அதோடு, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது போன்றவை  மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகரங்கள், புறநகர்கள், கிராமங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. டெல்லி என்சிஆர் பகுதியில் ரயில்வே டிராக்குகள், பஸ்நிலையங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன என  தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

  தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, கடந்த மாதம் 30ம் தேதியுடன் பிளாஸ்டிக் மேலாண்மைக்கான செயல் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான கெடு முடிந்து விட்டது. இவற்றை மீறிய மாநிலங்கள் சட்ட விதிகளின்படி இந்த மாதம் 1ம் தேதியில்  இருந்து மாதம் ஒரு கோடி ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டிவரும்.  இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) முன்னாள் கூடுதல் இயக்குநர் எஸ்.கே.நிகாம் கூறுகையில், ‘‘மாநிலங்கள் பல எங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. இதையடுத்து நாங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை  அணுகினோம். இதற்கான விலையை அவை தரவேண்டும். இந்த மாநிலங்களுக்கு அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.இந்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு சங்க தலைவர் ஆசிஷ் ஜெயின் கூறுகையில், ‘‘கழிவு மேலாண்மை பற்றிய பொறுப்பு மற்றும் தகவல்களை பெறுவதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும்  இடையே தகவல் பரிமாற்றத்தில் பெரிய இடைவெளி உள்ளது. எனவே, மாநிலங்களில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார்.



Tags : states ,Tamil Nadu , Destroy plastic ,waste, plan, Tamilnadu
× RELATED இந்தியாவில் பி.ஹெச்.டி பட்டம்...