×

டெல்லியில் மோடியுடன் ஜெகன் மோகன் சந்திப்பு: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை

புதுடெல்லி: ‘‘ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தோம்,’’ என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியை சந்தித்தது.  இதேபோல்,் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22ஐ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிடித்தது. நேற்று முன்தினம் நடந்த புதிய எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக ஜெகன் ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஜெகன் மோகன் சந்தித்து பேசினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, மாநிலத்தின் பொருளாதார நிலவரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து  இருவரும் ஆலோசித்தனர். மேலும், 30ம் தேதி நடக்கும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படியும் மோடியிடம் ஜெகன் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெகன் மோகன் அளித்த பேட்டியில், ‘‘ஆந்திராவுக்கு இன்று சிறப்பு அந்தஸ்தை நம்மால் பெற முடியாமல் இருக்கலாம். அதற்கு சிலருடைய கருணை நமக்கு தேவை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி  பிரதமரிடம் பலமுறை நினைவூட்டினேன். என்றாவது ஒருநாள் இந்த காரியம் நடக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 353  இடங்கள் உள்ளதால், அவர்கள் அரசமைக்க எங்களின் ஆதரவு தேவையில்லை. ஆந்திராவில் கடன் சுமை மிக  அதிகமாக இருக்கிறது. மாநிலம் இரண்டாக பிரியும்போது ரூ.97 ஆயிரம் கோடி கடன் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த கடன் சுமையானது ரூ.2.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாங்கள் கூறிய அனைத்தையும் பிரதமர் பொறுமையாக  கேட்டார்,” என்றார்.


Tags : Jagan Mohan ,meeting ,Delhi ,Modi ,Andhra Pradesh , Jagan Mohan ,meeting, Modi,Delhi,special status
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்