மின்வாரியத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற மின் கட்டணத்தை 30% உயர்த்த நடவடிக்கை?

* தொழிற்சாலைகள் மக்களுக்கு கடும் பாதிப்பு
* அதிகாரிகள் மீது தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: மின்வாரியத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் வகையில் மின் கட்டணத்தை 30 சதவீதம் அளவிற்கு உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்களின் நிதிநிலை  மிகவும் மோசமடையும் எனவும், தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தி பொருட்களின் விலை கடுமையாக உயரும் எனவும் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழகத்தில் 2 கோடிக்கும் மேலான வீடு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகம் சார்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இப்போது உடனடியாக அரசிடம்  இருந்து நிதி கிடைக்காவிட்டால் மின்வாரியம் திவாலாகும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் உதய் திட்டத்தில் இருப்பதால் மத்திய அரசோ, மாநில அரசோ நிதியை வாரி வழங்கலாம். இதன் மூலம் மின்வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்கலாம். மற்றும் சீரமைப்பு நடவடிக்கை மூலம், மின் இழப்பு மற்றும் நிர்வாக  சீர்கோளாறுகளை சரி செய்தாலே மின்வாரியத்தை லாபத்தில் இயக்கலாம்.ஆனால் இவற்றை எல்லாம் செய்யாமல் தமிழக மின்வாரியம் மீண்டும் மக்கள் தலையில் இடியை இறக்கிவிடும் நிலையில் உள்ளது. அதாவது மின்கட்டணத்தை 30 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவு ெசய்திருப்பதாக தகவல்  வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2014ல் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சிஜடியு தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:தமிழக மின்சார வாரியத்திற்கு மின் கட்டணத்தின் மூலமாகவும், அரசு மானியம் வாயிலாகவும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதைக்கொண்டு சம்பளம், கடனுக்கான வட்டி என்று செலவாகிறது. தற்போது வரவை  விட செலவு அதிகமாக இருக்கிறது.

இதனால் மத்திய நிதி நிறுவனங்கள், வங்கிகளில் வாரியம் கடன் வாங்குகிறது. கடந்த 2014-15ம் ஆண்டில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால் 12 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்த  விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மின்வாரிய தலைவராக சாய்குமார் பொறுப்பேற்றார். அவர் இழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். அதில் கிடைத்த தகவலைக்கொண்டு அதிக விலைக்கு மின்சாரம் வாக்குவதை முற்றிலுமாக நிறுத்தினார். தொடர்ந்து சந்தை விலைக்கு நிலக்கரி, உபகரணங்கள் வாங்குவது மற்றும் இதர  சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்காரணமாக இழப்பு ெகாஞ்சம், கொஞ்சமாக குறைந்தது.கடந்த 2015-16ல் ரூ.5,786 கோடி இழப்பு, 16-17ல் ரூ.4,348 கோடி என குறைந்தது. பிறகு லாபம் ஈட்டும் நிலைக்கு வாரியம் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்ேபாது மீண்டும் மின் வாரியம் நிதி ெநருக்கடியில் சிக்கியுள்ளதாக  கூறுகிறார்கள். அதவாது 2018-19ல் ரூ.7,760 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுவே இவ்வாண்டின் இறுதிக்குள் ரூ.13,320 கோடியாக உயரும் என தெரிவிக்கிறார்கள்.அதேபோல் உதய் திட்டத்தில் சேர்ந்ததால், ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை  உயர்த்தலாம் என்ற பலனை தவிர வேறு எந்த பயனும் எங்களுக்கு இல்லை என வாரியம்  தெரிவித்துள்ளது. தற்போதைய மின்தேவை 16,300 மெகாவாட்.  தமிழக மின்சார வாரியத்தின் உற்பத்தி திறன் கிட்டத்தட்ட 6,600 மெகாவாட், மத்திய தொகுதிப்பில் இருந்து 6,000 மெகாவாட் வாங்கப்படுகிறது. இதுவும் பணம் கொடுத்தே வாங்கப்படுகிறது.  மீதம் இருக்கும் மின்சாரம் தனியாரிடமிருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதற்கு ரூ.5.50 செலவு செய்யப்படுகிறது. இவ்வாறு செலவு செய்வதால் தான் இந்த நஷ்டம் ஏற்படுகிறது. உதய் திட்டத்தில் சேரும் போது அதற்கான  விதி என்னவென்றால் சம்மந்தப்பட்ட  திட்டத்தில் கையெழுத்திட்டால், உள்நாட்டு நிலக்கரி முழுவதுமாக மானிய  விலையில் கொடுப்போம் என்பதாகும். அப்படியென்றால் தற்போது ஏன் அதைக்கேட்டு  பெறவில்லை. எனவே, மின்வாரியம் நஷ்டத்தில் இயங்க காரணமாக இருக்கும் அமைச்சரும், துறை சேர்மனும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மறைமுக கட்டணம்
தமிழகத்தில் தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒருமாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்தால் பெரும்பாலானோருக்கு  500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் அதிகரிக்காது. தற்ேபாது 2 மாதத்துக்கு ஒருமுறை வசூலிப்பதால் பலருக்கும் மின்பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் செல்கிறது. இதனால் அவர்கள் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இது ஒரு மறைமுகமான கட்டண விதிப்பாக பலரும் கருதுகின்றனர்.

Tags : crisis , save electricity , financial crisis,30% electricity, bill?
× RELATED நிதி நெருக்கடி எதிரொலி: 10,000 ஊழியர் டிஸ்மிஸ் பன்னாட்டு வங்கி அதிரடி