கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் வசந்தகுமார் : எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

சென்னை “கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். மேலும் தன்னுடைய எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய போவதாகவும்”  எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். எம்பியாக தேர்வான எச்.வசந்தகுமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது  அவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் வாழ்த்துக்களை பெற்றார். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இரண்டு பேரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

சந்திப்புக்கு பின்னர் எச்.வசந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.பதவியை தக்க வைத்துக்கொள்வது என்றும், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்ற  முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூலமாகவும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சபாநாயகர் இருக்கும் பட்சத்தில் நாளைக்கே (இன்று) சென்று எனது ராஜினாமா கடிதத்தை  கொடுப்பேன். அதன் பிறகு டெல்லி செல்லவும் திட்டமிட்டு உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். எம்.எல்.ஏ.பதவியை எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் அவர் வெற்றி பெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியாகும். இதனால், அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மக்களவை தொகுதியுடன், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: