தேனி தொகுதியில் பணம் சுனாமியாக கொட்டியது ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ்.மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்திய மூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்,  விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. திருஷ்டி பரிகாரத்திற்காக நான் மட்டும் தோற்றுள்ளேன். இது, உண்மையான தோல்வி கிடையாது. உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகார பலம், பணபலம்  ஒன்று சேர்ந்து வெற்றி பெற செய்ய விடாமல் தடுத்து விட்டது. இருந்த போதிலும், நான் சுமார் 4 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளேன். எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன். தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் மீது தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லு முல்லுவில் ஈடுபட்டது. கோவை, திருப்பூரில் இருந்து 100 இவிஎம் மிஷின்கள் தேனி  தொகுதிக்கு அனுப்பப்பட்டது. இதுவரை ஆணையம் சரியாக விளக்கம் கொடுக்கவில்லை. தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை.

தேனி தொகுதியில் பணமழை பொழிந்தது என்று சொல்வதை விட பணம் சுனாமியாக கொட்டியது என்று தான் சொல்ல வேண்டும். தேனியில் பன்னீர் செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். ஓபிஎஸ்  தனது மகனுடன் வாரணாசி சென்று மோடியை சந்தித்த பிறகு நிலைமை மேலும் மாறியது. இவ்வளவு தில்லுமுல்லு செய்தும் ஓபிஎஸ் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் அதிக வாக்குகளை நான் பெற்றுள்ளேன். தேனி தொகுதியில்  தில்லுமுல்லு செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. வழக்கறிஞருடன் ஆலோசித்து விரைவில் வழக்கு ெதாடரப்படும். தேனி தொகுதியில் பல இவிஎம் மிஷின்களில் சீல் இல்லை. இது குறித்து கேட்டால் ஒரு மாதம் ஆகி விட்டது. இதனால்,  சீல் வைக்க பயன்படுத்தப்படும் அரக்கு உதிர்ந்து விடும் என்று பொறுப்பற்ற பதிலை கூறுகிறார்கள்.தமிழகத்தில் அமைந்தது போன்று வட மாநிலங்களில் கூட்டணி அமையவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் பிரதமராக வருவார் என்று அறிவித்தார். ஆனால், வட மாநில தலைவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர்  செல்வம் மீது மோடிக்கு இவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. பாஜகவினராக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மீது இல்லாத காதல் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை. ராகுல் காங்கிரஸ்  தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார் என்றார்.பேட்டியின் போது, ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவராமன், ரங்கபாஷ்யம், செல்வம், ஆலந்தூர் மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத், திருவான்மியூர் மனோகரன், எம்.ஆர்.ஏழுமலை, சூளை ராஜேந்திரன்  உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: