எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமமுகவில் இருந்து யார் செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம்: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: கட்சியில் இருந்து யார் செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம். உண்மையானவர்கள் மட்டும் உடன் இருக்கலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அடையாரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஏன் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது போகப்போகத்தெரியும். தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதியில் உள்ள பூத்களில் அமமுகவிற்கு ஜீரோ வாக்குகள் என பதிவாகியுள்ளது. இதற்கு தேர்தல்  ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்த அரசு முடிவை நோக்கி  சென்றுகொண்டிருக்கிறது. 300 பூத்களில் எங்களுக்கு ஜீரோ என பதிவாகியுள்ளது. அப்படி என்றால் பூத் ஏஜெண்டுகளே ஓட்டுபோடவில்லை என்று கூறுகிறீர்களா?  ஊட்டியில் 50 பூத்களில் ஜீரோ என பதிவாகியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்.  நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூறவில்லை. கட்சியில் யாரும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. யாரும்  போகவேண்டும் என்றால் போகலாம்.

அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனி நபரோ, அவருடன் சேர்ந்து 10 பேரோ சென்றால் ஒரு கட்சி அழிந்து விடாது. நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய வேட்பாளர்களை கட்டாயப்படுத்தி நான் நிற்க சொல்லவில்லை. அவர்களே  விருப்பப்பட்டு தான் தேர்தலில் நின்றார்கள். வரும் 28ம் தேதி சசிகலாவை சென்று சந்திக்க உள்ளேன்.பூத்களில் ஜீரோ வாக்குகள் பதிவாகியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க உள்ளோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் சோர்ந்துபோகவில்லை. கட்சியை வலுப்படுத்த மேலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தமிழகம்  முழுவதும் ஒரே கவனத்துடன் தான் பயணிப்போம். கட்சியில் இருந்து ஒரு தனி நபரோ, அல்லது 4 பேரோ போகலாம். அதனால் எங்களுக்கு நல்லது தான். உண்மையாக இருப்பவர்கள் எங்களுடன் இருக்கலாம். மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள  தயாராகி வருகிறோம்.  இவ்வாறு கூறினார்.

தலை தப்பியது

டிடிவி தினகரன் மேலும் நிருபர்களிடம் கூறுைகயில், எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிவருவார்கள். அரசியலில் ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது. தற்போது அதிமுகவின் தலை தப்பித்துள்ளது.  விரைவில் முடிவிற்கு வரும் என்றார்.

Related Stories: