ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது முட்புதர் மண்டிய அரசு விருந்தினர் மாளிகை

புழல்: பராமரிப்பு இல்லாததால் முட்புதர் மண்டி இடிந்துவிழும் ஆபத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழவரம் ஏரியின் மதகு அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகை 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த அரசு விருந்தினர் மாளிகை நீண்ட காலமாக பராமரிப்பின்றி விடப்பட்டதால் கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் ஜன்னல், கதவு, மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்  அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இதனால் இந்த இடத்தை சமூக விரோதிகள் இலவச பாராக பயன்படுத்தி வருகின்றனர். சோழவரம் ஏரிக்கரை பகுதியில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர். நீண்ட புராதான மிக்க இந்த அரசு பங்களாவை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசு விருந்தினர் கட்டிடத்தின் மதிப்பை உணர்ந்து உடனடியாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  சோழவரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: