முறையான பராமரிப்பு இல்லாததால் வலுவிழந்து வரும் நீர்த்தேக்க தொட்டி

பல்லாவரம்: குன்றத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க, குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் நத்தம் பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பல லட்சம் செலவில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனை, அதிகாரிகள் பல மாதங்களாக முறையாக பராமரிக்காததால், கான்கிரீட் படிக்கட்டுகள் முற்றிலும் சிதிலமடைந்தது. இதையடுத்து, தற்காலிகமாக இரும்பு கம்பியால் படிக்கட்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் அருகே தொட்டியின் மேல்தளத்தில் உள்ள தடுப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால், ஊழியர்கள் இந்த நீர்த்தேக்க தொட்டியின் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நத்தம் பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி பல மாதங்களாக பராமரிப்பின்றி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் அதன் அருகில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில்  நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக வருடம்தோறும்  பராமரிப்பு செலவு என அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

ஆனால், பேரூராட்சி ஊழியர்கள் இந்த தொட்டியை சுத்தம் செய்வதே இல்லை. இதற்காக அரசு வழங்கும் பணம் எங்கு செல்கிறதோ தெரியவில்லை. மேலும், நீரேற்றும் பணியை முறையாக செய்யாததால், அடிக்கடி இந்த தொட்டியில் தண்ணீர் நிறைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொட்டியை சுத்தம் செய்யாததால் நீரில் பாசி படிந்தும், கலங்கிய நிலையிலும் காணப்படுகிறது. இதை பயன்படுத்தும் மக்கள் தொற்று நோய் பீதியில் உள்ளனர். இதுகுறித்து குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் இந்த நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பராமரித்து, முறையாக சுத்தப்படுத்தி, சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: