எர்ணாவூர் சுடுகாட்டில் மின் மோட்டார் பழுது தண்ணீர் வசதி இல்லாததால் இறுதி சடங்கு செய்ய சிரமம்

திருவொற்றியூர்:  எர்ணாவூர் சுடுகாட்டில் கடந்த 2 மாதமாக மின் மோட்டார் பழுதடைந்துள்ளதால், இறுதி சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூரில் மாநகராட்சி சுடுகாடு உள்ளது. இதை,  3, 4, 5 ஆகிய வார்டுகளை சேர்ந்த பர்மா நகர், நேதாஜி நகர், பாரதியார் நகர், பாரத் நகர், அனல் மின் நிலைய குடியிருப்பு, ராமநாதபுரம் போன்ற 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சுடுகாடு முழுவதும் குப்பை குவியலாகவும், புதர் மண்டியும் காணப்படுகிறது. மேலும், தண்ணீர் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் கடந்த 2 மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனை, இதுவரை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதனால், சடலத்தை புதைக்க,  எரிக்க வரும் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல்  கடும் சிரமப்படுகின்றனர்.

இறுதி சடங்கு செய்வதற்கு கூட வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, சடலத்தை அடக்கம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளும் இங்குள்ள அலுவலகத்துக்கு வருவதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சுடுகாட்டை சீரமைக்கவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: