சென்னை ஐஐடி அருகே மர்மமான முறையில் மான் உயிரிழப்பு

சென்னை: சென்னை கவர்னர் மாளிகை மற்றும் சென்னை ஐஐடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இந்த மான்கள் இரவு நேரங்களில் அடையாறு ஆற்றங்கரை ஓரங்களில் சுற்றி வருவது வழக்கம். சில நேரங்களில் இந்த மான்கள் வழி தவறி கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில் சுற்றி வருவது வழக்கம்.  மேலும், அவ்வப்போது மான்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறப்பதும் உண்டு. அதேநேரம், அடையாறு கரையோரம் சிலர் உணவில் விஷம் வைத்து இறைச்சிக்காக மான்களை கொன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடி அருகே, கோட்டூர் மண்டபம் சாலையோரம் உள்ள சுடுகாடு ஆருகே மான் ஒன்று நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று விசாரணை நடத்தினர்.

மேலும், மான் உயிரிழப்பு குறித்து வனத்துறைக்கு தகவல் ெகாடுத்தனர். அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, உயிரிழந்த மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே நேரம் உயிரிழந்த மான் மாமிசத்துக்காக உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா? அல்லது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல் நாவறண்டு உயிரிழந்ததா என்பது  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: