அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும்

சென்னை: அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என்று டாக்டர்கள், ஊழியர்கள், மாணவர்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அலுவலகங்கள், டாம்ப்கால் மருந்து விற்பனை மையம், சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் அமைந்தள்ளன. இங்கு, 1000க்கும் மேற்ப்பட்ட  ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் 800க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் சித்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாகவும், 310க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், விடுதி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு பணம் தேவைப்படும் போது அண்ணா ஆர்ச்சுக்கு எதிரே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று வர வரவேண்டியுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரை கிலோ மீட்டர் நடந்து ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.  உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை எடுத்து வருபவர்களும் தங்களுக்கு பணம் தேவைப்படும்போது சாலையை கடந்து ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்க வேண்டியுள்ளது. கிராமபுறங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் கூட அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் வங்கிகளோ, ஏடிஎம் மையமோ இல்லை.  எனவே டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள் சிரமமின்றி பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம் மையம் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: