×

2வது பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கையுடன் ஆஸ்திரேலியா மோதல்

சவுத்தாம்ப்டன்: ஐசிசி உலக கோப்பை தொடருக்கான 2வது பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் இன்று மோதுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் லீக் சுற்றில் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளன. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதியது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மித் 116 ரன் (102 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். வார்னர் 43, ஷான் மார்ஷ் 30, கவாஜா 31, அலெக்ஸ் கேரி 30 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் லயம் பிளங்க்கெட் 4, மார்க் வுட், டாம் கரன், டாவ்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 49.3 ஓவரில் 285 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ராய் 32, வின்ஸ் 64, ஸ்டோக்ஸ் 20, பட்லர் 52, மொயீன் அலி 22, வோக்ஸ் 40, பிளங்க்கெட் 19 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 12 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. ஆஸி. பந்துவீச்சில் பெஹரண்டார்ப், ரிச்சர்ட்சன் தலா 2, கோல்டர் நைல், ஸம்பா, லயன், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதுடன் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் இங்கிலாந்தை முதல் பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்தியதால் ஆஸி. அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னாள் கேப்டன் ஸ்மித், தொடக்க வீரர் வார்னர் இருவரையும் ரசிகர்கள் கிண்டலடித்த நிலையில், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தியதும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஸ்மித் உறுதியுடன் விளையாடி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியை சந்திக்கிறது. இலங்கை அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 87 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதால், ஆஸி. அணிக்கு எதிராக வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அரை சதம் அடித்த கேப்டன் கருணரத்னே (87 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (64 ரன்), குசால் மெண்டிஸ் (37 ரன்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். குசால் பெரேரா, திரிமன்னே, டி சில்வா ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தால் ஆஸி. அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

Tags : Australia ,Sri Lanka ,practice match , In training practice, Sri Lanka, Australia, conflict
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...