×

உ.பி.யில் மெகா கூட்டணியை பாஜ வீழ்த்தியது எப்படி?

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைத்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜை, பாஜ வீழ்த்தியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்திருந்தது. இந்த மெகா கூட்டணியை வீழ்த்தி பாஜ இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாடி 5 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் சோனியாவின் ரேபரேலி தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.  

 பாஜ இங்கு அதிக இடங்களை கைப்பற்றியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாஜவுக்கு இங்கு உயர் சாதியினரான தாகூர் மற்றும் பிராமணர்கள் அதிகம் பேர் ஆதரவளித்துள்ளனர். இந்த சாதியினர் வாக்குகள் பாஜவுக்கு 8 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெற்றுத்தந்துள்ளது. மெகா கூட்டணியில் அஜித்சிங் இடம் பெற்றிருந்த நிலையிலும் அவர் சார்ந்த பெரும்பான்மையான ஜாட் இனத்தவர்கள் பாஜவுக்கு வாக்களித்தனர். ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் போட்டியிட்ட அஜித்சிங் மற்றும் அவரது மகன் ஜெயந்த் ஆகியோர் தோல்வியை தழுவினர். இது தவிர யாதவர்கள் அல்லாத மற்ற ஓபிசி சமூகத்தினரின் வாக்குகள் 15 சதவீதம் அளவுக்கு பாஜவுக்கு கிடைத்தது.

அப்னா தளம் கட்சியின் வாக்குகளும் பாஜவுக்கு பலம் சேர்த்தன.  எஸ்சி பிரிவை சேர்ந்த ஜாதவ் சமூகத்தினர் அல்லாதவர்களின் வாக்குககளை பாஜ பெற்றதன் மூலம் கூடுதலாக 15 சதவீத வாக்குகள் பாஜவுக்கு கிடைத்தன. இது மாயாவதி கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது தவிர சமாஜ்வாடி யாதவ சமூகத்தை சேர்ந்த இளம்தலைமுறையினர் பாஜவுக்கு ஓட்டுபோடுவதை தடுக்க நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. காங்கிரசை மெகா கூட்டணியில் சேர்க்க தவறியதும் சமாஜ்வாடி பகுஜன் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஓட்டுகள் 10 தொகுதிகளில் பிரிந்ததால் மெகா கூட்டணி உபியில் தோல்வியை தழுவியது.

காங்கிரஸ் ரேபரேலியில் மட்டும் வெற்றி ெபற்றாலும் மற்ற இடங்களில் காங்கிரசின் 2 சதவீத வாக்குகள் பிரிந்தன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு முஸ்லிம்களின் 10 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா 31 இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அவரது பிரசாரம் வரவேற்பை பெறவில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாஜவுக்கு போட்டியாக காங்கிரஸ் இல்லை என்றாலும் காங்கிரஸ் ஓட்டுகள் பிரிந்தது பாஜவுக்கு வாய்ப்பாக அமைந்தது.  உபி.யில் முதல்முறையாக வாக்களித்தவர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் பாஜ வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தது. வேலைவாய்ப்பின்மை தேர்தலுக்கு முன்பு முக்கிய பிரச்னையாக இருந்தாலும் 43% இளைஞர்கள் மோடி வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக கருதி வாக்களித்தனர்.  இதுதவிர  தேசியவாத பிரச்னை இளம் தலைமுறையினரை பாஜவுக்கு வாக்களிக்க தூண்டியது.

Tags : Bhajji ,Mega Alliance ,UP , Mega coalition, baju,
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை