இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடக்கிறது

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பதவியேற்கின்றனர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் பதவியேற்கிறார்கள்.தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 37 ெதாகுதிகளில் மகத்தான வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் 22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக  9 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை காட்டி வாழ்த்து  பெற்றனர். மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரும்பான்மையோர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.இந்த நிலையில்திமுக சார்பில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக  எம்எல்ஏக்கள் 13 பேரும் 28ம் தேதி(நாளை) காலை பதவியேற்க உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

 

திமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவியேற்பு முடிந்ததும் இடைத்ேதர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்ற  பின்னர் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்கள் நலப்பணிகளை உடனடியாக தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு பதவியை தான் வகிக்க முடியும் என்பது விதி உள்ளது. இதனால், அவர் இன்று  தன்னுடைய எம்எல்ஏ பதவியை சபாநாயகர் தனபாலை சந்தித்து ராஜினாமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: