அருப்புக்கோட்டையில் மந்தகதியில் நடக்கும் ஸ்மார்ட் பஸ் ஸ்டாப் கட்டுமான பணி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மந்தகதியில் நடக்கும் ஸ்மார்ட் பஸ் ஸ்டாப் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை, சென்னை செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் நான்குவழிச்சாலையில் சென்றாலும், அருப்புக்கோட்டை  பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது கிடையாது. இதனால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். பொதுநல அமைப்பினரின் முயற்சியால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் மேம்பாலத்தில் சென்ற பஸ்களை சர்வீஸ் ரோடு வழியாக  பஸ்கள் அருப்புக்கோட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுத்தது.

 அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் காந்திநகர் சர்வீஸ் ரோடு வழியாக வந்து செல்கின்றன. சர்வீஸ் ரோட்டில் பஸ் ஸ்டாப் இல்லாததால் பயணிகள்  சிரமப்பட்டனர். ரோட்டிலேயே வெயிலில் நின்று காத்திருந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.  மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லை. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகள் நலன் கருதி காந்திநகர் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் செலவில் நவீன பஸ் ஸ்டாப், நிழற்குடை, நவீன கழிவறை,  போலீஸ் அவுட்போஸ்ட், வாகன காப்பகம், மினரல் வாட்டர் பிளான்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டு அதற்கான பணி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.

பணி மந்தமாக நடந்து வருவதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். மணல் தட்டுப்பாட்டால் பணிகளை விரைந்து செய்யமுடியவில்லை என ஒப்பந்தகாரர் கூறுகிறார். மாற்று மணலான எம்சாண்ட் மணலை உபயோகப்படுத்த நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் பணிகளை  விரைந்து முடித்தால் தான் மதுரை-தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் எந்தவித சிரமமின்றி செல்ல வசதியாக இருக்கும்.  எனவே நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Aruppukkottai , Aruppukottai, Smart Bus Stop construction work
× RELATED அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில்...