கோடை விடுமுறையில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

விருதுநகர்: கோடை விடுமுறையில் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கடமையை செய்யாமல் பொறுப்புகளை தட்டி கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தும் நடைமுறை கால, காலமாக தொடர்ந்து வருகிறது. குழந்தைகளை விடுமுறை நாட்களில் வேலைக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கல்வி செலவினங்களுக்கு பயன்படுத்தும் அவல நிலையில் மக்களின் வாழ்வாதரம் உள்ளது.மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு, நூற்பாலை, செங்கல் சூளை, சிறு தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், மெக்கானிக் ஷாப் அதிகளவில் இருப்பதால் குழந்தை தொழிலாளர் நடைமுறையை ஒழிக்க முடியவில்லை. குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் கிடைப்பதால் நிறுவனங்களும் குழந்தைகளை பணியில் அமர்த்துகின்றன.  குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் மாவட்டத்தில் 1987 முதல் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

குழந்தை தொழிலாளர் நிலையில் இருந்து மீட்கப்படுவோருக்கு கல்வி அளிக்க மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர் பள்ளிகள் உள்ளன. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 18 வயதிற்கு உட்பட்டோரை தீப்பெட்டி, பட்டாசு, பெட்ரோல் பங்க் ஆகிய அபாயமான வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை மீட்க தொழிலாளர் துறை, தொழிற்சாலைத்துறை, சைல்டுலைன், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தைகள் அலகு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட கள அலுவலர்கள் உள்ளிட்ட துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.  குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ குழந்தை சட்டம் 2016ன் படி குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

கோடை விடுமுறையையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள், மெக்கானிக்ஷாப், மரக்கடைகளில் பள்ளி மாணவர்கள் வேலை செய்கின்றனர். விடுமுறையில் குறைந்த சம்பளத்திற்கு பணியாட்கள் கிடைப்பதால் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பள்ளி மாணவர்களை பணியமர்த்தி வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நியமிக்கப்பட்ட துறை அதிகாரிகள் ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டத்தில் எங்கும் சோதனை நடத்தவில்லை. இதனால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தட்டி கேட்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. எனவே நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்து கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : child workers ,summer vacation ,viewing officials , Summer vacation, baby workers, number, fun, officers
× RELATED மன்னார்குடி கமலாதேவி காளியம்மன்...