தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களான நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூரில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் கேரளா நோக்கி நகர்ந்து ஜூன் 6ஆம் தேதி மழை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: