சொகுசு காரை விற்று பணம் தருவதாக துப்பாக்கி சுடும் வீரரிடம் லட்சக்கணக்கில் மோசடி: ஆசாமியிடம் தீவிர விசாரணை

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிபி ராஜேஷ் (40). துப்பாக்கி சூடும் வீரரான இவர், சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 9வது பிரதான சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென பணத்தேவை  ஏற்பட்டுள்ளது. இதனால், தனது சொகுசு காரை விற்க முடிவு செய்துள்ளார். இதையறிந்த அவரது நண்பர் லிங்கேசன் என்பவர், தனக்கு தெரிந்த திருநெல்வேலி மாவட்டம் தென்காசி குறிஞ்சி நகரை சேர்ந்த முத்துமணி (38) என்பவர் மூலம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்துக்கு காரை விற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

அதன்படி, கடந்தாண்டு மே மாதம் சிபி ராஜேசுக்கு அறிமுகமான முத்துமணி, தான் பாபா மல்ட்டி பிரான்ட் கார்ஸ் என்ற நிறுவனத்தை மதுரை தனக்கன் குளம் ஜிஎஸ்டி சாலையில் நடத்தி வருவதாகவும், உங்கள் காரை விற்று 15 நாட்களுக்குள்  பணம் தருவதாகவும் கூறி, காரை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் பணம் தரவில்லை. பலமுறை அவரை தொடர்பு கொண்டும் பதில் இல்லை. இதுகுறித்து சிபி ராஜேஷ், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், தென்காசியில் பதுங்கி இருந்த முத்துமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: