×

10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்: கண்ணகி நகரில் பரபரப்பு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கடந்த 10 நாளாக குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளும், எழில்நகர் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு பொது குழாய்கள்  மூலம் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக 5 நாட்களுக்கு ஒரு முறைதான் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கண்ணகி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் வர வேண்டும்’’ என்றனர். இதையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ‘உடனே குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்’என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Denounced ,drinking water,stir ,empty ,colonies:
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...