×

முறையான வசதி இல்லாத 43 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று மறுப்பு : அதிகாரிகள் நடவடிக்கை

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த 258 பள்ளி வாகனங்களில், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் 43 வாகனங்களுக்கு தகுதி சான்று மறுத்து, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தாம்பரம் அருகே கடந்த 2012ம் ஆண்டு தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக பள்ளி மாணவி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களும் தங்களது வாகனங்களை, அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனைக்கு உட்படுத்தி, தகுதி சான்று பெற்ற பிறகே இயக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டது. இந்த ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர் உரிமம், வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட 21 பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளதா என சோதனை  செய்து, தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், இந்த ஆய்வு வருவாய் துறை, கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்று வருகிறது. சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில் 77 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 473 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை ஆய்வு  செய்யும் பணி, கடந்த 17ம் தேதி தொடங்கியது.சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில், மாவட்ட கல்வி  அலுவலர் தாமோதரன், போக்குவரத்து உதவி கமிஷனர் அன்வர் பாஷா, சோழிங்கநல்லூர்  வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன், மோட்டார்  வாகன ஆய்வாளர்கள்  ஏழுமலை, முரளி ஆகியோர்  வாகனங்களை சோதனை மேற்கொண்டனர். முதற்கட்டமாக 179 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், படிக்கட்டு, அவசர கால கதவு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படாத 29 வாகனங்களுக்கு தகுதி  சான்று வழங்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, கடந்த 22ம் தேதி 79 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முறையான பாதுகாப்பு வசதியில்லாத 14 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மூன்றாம் கட்டமாக வரும் 31ம் தேதி மீதமுள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட  உள்ளன.
அப்போது, திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு இருப்பின் சோதனை செய்து, தகுதி சான்று வழங்கப்படும். அவ்வாறு இல்லையெனில், அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : facility , proper, facility, Eligibility, 43 school ,vehicles, Officials action
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...