புதிய எம்.பி.க்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

புதுடெல்லி: பதினாறாவது மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 17வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், வேலூரை தவிர 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் நேற்று காலை, ராஷ்டிரபதி பவனுக்கு வந்தனர். அவர்கள் ஜனாதிபதியிடம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களின் பட்டியலை  சமர்ப்பித்தனர். முன்னதாக, 16வது மக்களவையை கலைக்கக்கோரி, மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்தது. இதையடுத்து, புதிய அரசு பதவியேற்க வசதியாக, 16வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து 17வது மக்களவையில் புதிய அரசு அமைக்க வருமாறு முறைப்படி மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

× RELATED காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள்...