மேற்குவங்கத்தில் பாஜ கணக்கு வென்றது

கொல்கத்தா: மக்களவை தேர்தலில், மேற்குவங்க மாநிலத்தில் பாஜ பெரும் எழுச்சி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜி தனது தொடர் போராட்டங்களால் அவர்களை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். நடந்து முடிந்த மக்களை தேர்தலில், அவரது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது 2014 தேர்தலில் பிடித்த 34 தொகுதிகளை காட்டிலும் 12 தொகுதிகள் குறைவு என்பதால், அக்கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாலான இடங்களை பிடிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ், தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லாமலும், அராஜக போக்குடனும் நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், பாஜ இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ராம கோஷத்தை முன்னிறுத்த ஆரம்பித்தது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ராம கோஷத்தை கேட்டாலே, அவர்களை அடிக்க ஆரம்பித்தனர். இது அக்கட்சிக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்த, மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள பழங்குடியின பகுதிகளைச் சேர்ந்த ஜங்கல்மகால் பிராந்தியமும், வடபகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியும் திரிணாமுலை முற்றிலுமாக கைவிட்டது. இப்பகுதிகளில் பாஜ அபார வெற்றி பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில், 39 சதவீத ஓட்டுக்களை பெற்றிருந்தது. அது இந்த தேர்தலில் 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், பெரும் சோகம், இந்த வாக்கு சதவீதம், அதன் வெற்றிக்கு உதவவில்லை என்பதுதான். ஆனால், பாஜ.வுக்கு கடந்த தேர்தலில் 17% ஆக இருந்த வாக்கு சதவீதம் இப்போது 40% ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் 2021ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதுள்ள வாக்கு சதவீதம் பாஜ.வுக்கு தொடர்ந்தால், அக்கட்சி 130 தொகுதிகளில் வெல்வதற்கு உதவும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அங்கு பெரும்பான்மைக்கு 148 தொகுதிகளில் வென்றால் போதும். இந்த தேர்தல் மம்தாவுக்கு ஒரு எச்சரிக்கை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

Tags : BJP ,West Bengal , West Bengal, Bhaj, won
× RELATED சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய மனு தள்ளுபடி