சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ராஜஸ்தானில் 6 மாதத்தில் பாஜவுக்கு 20% வாக்கு அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்றதை விட, பாஜவுக்கு ராஜஸ்தானில் 20 சதவீத ஓட்டுகள் மக்களவை தேர்தலில் அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ அணிக்கு 54.5 சதவீதம் வாக்கு கிடைத்தது. அது மக்களவை தேர்தலில் 58.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தேசிய ஜனநாயக அணிக்கு ஓரளவு கூடுதல் வாக்குகள் கிடைத்தது; மொத்தமுள்ள 25 இடங்கள் கிடைக்கவும் இது கைகொடுத்தது. பாஜவுக்கும்  ஓட்டுகள் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம், மோடியின் பிரசாரம்தான் என்று மாநில பாஜ தலைவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த பாஜ தோல்வி அடைந்தது; காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அப்போது வசுந்தரா  தலைமையிலான பாஜவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 38.8 சதவீதம் தான்; இப்போது மக்களவை தேர்தலில் 58.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, சட்டப்பேரவை ேதர்தலை விட 20 சதவீதம் வாக்குகளை பாஜ அதிகம் பெற்றுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ெமாத்தமுள்ள 200 இடங்களில் 73 இடங்களைதான் பிடிக்க முடிந்தது. மக்களவை தேர்தலில் 185 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜ  அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 20  எம்பி இடங்களில் மிக அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தை காட்டியுள்ளது பாஜ. ஒரு லட்சம் முதல் 3.5 லட்சம் வாக்குகள் வரை அதிகம் பெற்று பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து பாஜ நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சியில்  வசுந்தரா ராஜேவுக்கு எதிர்ப்பு இருந்தது. ஆர்எஸ்எஸ் ஒரு  பக்கம், இன்னொரு பக்கம் ராஜே ஆதரவாளர்கள்; நடுவே அமைதியாக இருந்த அதிருப்தியாளர்கள். ராஜே வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புகள் உழைக்கவில்லை; அதிருப்தி கோஷ்டியும் ஒதுங்கி கொண்டது. ராஜே ஆதரவாளர்கள் மட்டும்தான் பிரசாரம் செய்தனர். விளைவு பாஜ தோற்றது. ஆனால், இந்த முறை ஆர்எஸ்எஸ் முழு வீச்சில் இறங்கி, பாஜவினரை ஒருங்கிணைத்தது; அதனால் தான் பாஜ மொத்த இடங்களையும் அள்ளியது’ என்று தெரிவித்தனர்.

× RELATED கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வராது : முதல்வர் குமாரசாமி உறுதி