ஆந்திராவில் பரிதாபம் நோட்டாவிடம் தோற்ற காங்கிரஸ், பாஜ கட்சிகள்

அமராவதி: ஆந்திராவில் தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜ.வும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்று பரிதாப நிலைக்கு சென்றுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக ஆந்திராவில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு இது வேதனையை அளித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானாவை உருவாக்கிய விவகாரத்தில், காங்கிரஸ் நடந்து கொண்ட விதத்திற்கான தண்டனையை கடந்த 2014 தேர்தலில் ஆந்திர மக்கள் அளித்தனர். பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் இழந்த பெருமையை மீட்கும் விதத்தில், இந்த (2019) தேர்தலில் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நம்பாமல் காங்கிரசை தோற்கடித்துள்ளனர் மக்கள். இம்மாநிலம் 175 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. இதில்  தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், மாநிலம் முழுவதும் மொத்தமாக 3 லட்சத்து 68 ஆயிரத்து 878 வாக்குகளைத்தான் பெற முடிந்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3.13 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், இக்கட்சி 1.17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

கடந்த 2014 தேர்தலில் அது மொத்தம் 8,02,072 வாக்குகளை பெற்றது (2.77 சதவீதம்), அதைவிட தற்போது குறைந்துவிட்டது. இந்த  தேர்தலில் நோட்டா வாக்குகளைவிட காங்கிரஸ் பெற்ற வாக்குகள் குறைவு என்பது அந்த கட்சியினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 4,01,969 வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகியுள்ளது (1.28 சதவீதம்). சரி, காங்கிரஸ் நிலைமைதான் இப்படி என்றால், பா.ஜ.வை எடுத்துக் கொண்டால் அதன் நிலைமையும் மோசமாகத்தான் உள்ளது. மோடி அலையில் நாடே அதிர்ந்துள்ளபோது, ஆந்திராவில் மட்டும் அந்த கட்சியால் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. இந்த தேர்தலில் பா.ஜ. மொத்தம் 2,64,303 வாக்குகளைப் பெற்றுள்ளது (0.84 சதவீதம்) மொத்தம் 174 பேரவை தொகுதிகளில் மட்டும் பா.ஜ. போட்டியிட்டது. கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ. போட்டியிட்டது. இதனால், 13 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ. அப்போது மொத்தம் 6,32,599 வாக்குகளைப் பெற்றது (2.18 சதவீதம்). மக்களவை தேர்தலில் பா.ஜ. 0.96 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 1.29 சதவீத வாக்குகளும் பெற்றன. நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.49 சதவீதம். இந்த இரண்டு தேசிய கட்சிகளும் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்று தோற்றது பரிதாபமாகத்தான் உள்ளது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஆந்திராவை பல ஆண்டுகளாக ஆண்ட கட்சி காங்கிரஸ். ஆனால், ராஜசேகர ரெட்டியோடு அதன் ஆதிக்கம் ஓய்ந்து விட்டது. ஆந்திராவில் என்டிஆருக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு வந்தார். அவர் காங்கிரசின் செல்வாக்கை குறைத்ததோடு, ஆந்திராவில் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். அந்த இரும்புத் திரையை உடைத்து, காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தியவர் ராஜசேகர ரெட்டி. தொடர்ந்து 2வது முறையாகவும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். இங்குதான், காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கியது. காங்கிரசுக்கு உயிர் கொடுத்த தனது தந்தைக்குப் பிறகு, முதல்வர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று இப்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி கேட்டார். அதை நிராகரித்த காங்கிரஸ் மேலிடம், மூத்த தலைவர்களுக்கு அந்த பதவியை அளித்தது. இதனால், தனிக்கட்சி தொடங்கினார் ஜெகன். அப்போது அவரை ஒடுக்குவதற்காக காங்கிரஸ் கொடுத்த தொல்லைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஜெகனை சிறையில் தள்ளி, அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, குடும்ப செலவுக்கு கூட வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப்பட்டது. ்அதன் பலனை ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் அனுபவிக்க தொடங்கி இருக்கிறது.

Tags : parties ,Congress ,Bhajan ,Andhra Pradesh , Andhra Pradesh, Awful, Notta, Congress, BJP parties
× RELATED கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்