மோடி சந்திக்க உள்ள முக்கிய பிரச்னைகள்

புதுடெல்லி: மக்களவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, முதல் பணியாக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்பதால் இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. பல்வேறு முக்கிய துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். வேலைவாய்ப்பு புள்ளி விவரம் முந்தைய ஆட்சி காலத்தில் வெளியிடாமல் முடக்கி வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் புள்ளிவிவரத்துறையின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த வேண்டும் என்றால் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த புள்ளிவிவரத்தை புதிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஜிடிபி விகிதத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால், அதன் வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட தேக்கநிலையிலே இருந்துவிட்டது. அதேபோல், தொழில் துறையிலும் முன்னேற்றம் இல்லை. இதனால், வேலைவாய்ப்பு குறைந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.

தொழில்துறையில் முதலீடுகள் அதிக அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் மோடி அரசு நெருக்கடியான நிலையை சந்தித்தது. இதனால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடும் மோசடி தொழிலதிபர்களை பிடித்து கடன் வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: