அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் மின்சாதனங்கள் பராமரிப்பு வருடாந்திர பதிவேடு கட்டாயம்

சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களின் வருடாந்திர பராமரிப்பு பதிவேடுகளை அவசியம் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் உதவிப்பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் கடந்த 7ம் தேதி கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த நேரத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனாலும், அதுவும் திடீரென பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு, தலை காய சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் கருவிகளுக்கு மின்சாரம் இல்லாததால் ஆக்சிஜன் கிடைக்காமல் 5 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தெரிவித்தது. ஆனால் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக தான் வெண்டிலேட்டர் வேலை செய்யவில்லை என்று பொதுப்பணித்துறை தெரிவித்தது.

இதன் மூலம் வெண்டிலேட்டர் வேலை செய்யாமல் 5 பேர் உயிரிழந்து இருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதில், மருத்துவமனையில் வைக்கப்பட்ட ஜெனரேட்டர் எப்போது வாங்கப்பட்டது, அதன் ஆயுட்காலம், ஜெனரேட்டர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதா இல்லைல. இது போன்று அரசு மருத்துவமனை, மற்றும் அரசு அலுவலகங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் உதவி பொறியாளர்கள் அதற்கான பதிவேடுகள் வைத்திருப்பதில்லை. இதனால், மின்சாதன உபகரணங்கள் நன்றாக இருக்கிறதா என்பது கூட தெரிவதில்லை. இதுபோன்ற நிலையில் தான் அடிக்கடி மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ரபீந்தர் அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர் வருடாந்திர பராமரிப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் ஜெனரேட்டர், ஏர் கண்டிஷனர் எப்போது வாங்கப்பட்டது, தீ தடுப்பு சாதனங்கள் எப்போது வைக்கப்பட்டது, லிப்ட், ஜெனரேட்டர், ஏசியை பராமரித்தது எப்போது, பராமரிப்பு ஒப்பந்தம் யாருடன் போடப்பட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அந்த பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மேலும், ஏசி, ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எந்த கம்பெனியிடம் வாங்கப்பட்டது, எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த பதிவேட்டில் இடம் பெற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: