×

சுத்தமில்லாத டேங்கர் லாரி, கேன்கள் மூலம் சென்னை மக்களுக்கு தரமற்ற தண்ணீர் விநியோகம்

* கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசும் அவலம்  வாரம் ஒருமுறை மட்டும் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள்

சென்னையில் தரமற்ற முறையில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் லாரிகளின் கொள்ளையால் பொதுமக்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் புறநகர் பகுதிகளில் இருந்தும், கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துவந்து சென்னையின் உட்புற பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், சென்னைக்கு ஒரு நாளைக்கு தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். இதில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் லாரிகளில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. தாமரைப்பாக்கம், மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள் மூலம் 45 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.
 
சிக்கராயபுரத்தில் இருந்து 30 மில்லியன் லிட்டர் நீர் தினமும் எடுக்கப்படுகிறது. இங்கிருந்து கொண்டுவரப்படும் நீர் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 41 மையங்களில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில் சிறிய ரக வாகனங்கள் உதவியுடன் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. முறையாக நீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்களும், குடிநீர் வாரியம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள், கேன்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற முறையிலும் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில் டேங்கர் லாரிகளை முறையாக சுத்தம் செய்யாமலும், கேன்களை சுத்தமாக பராமரிக்காததாலும் தொற்றுநோய் பரவும் சூழல் நிலவியுள்ளது.

இதேபோல், சென்னையில் குடிநீர் வாரியம் விநியோகம் செய்யும் லாரிகள் போக சுமார் 2 ஆயிரம் தனியார் லாரிகள் மூலமும் மருத்துவமனை, ரயில் நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.
இப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படும் நீர் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளதா என்பதை கண்காணிக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குடிநீர் வாரிய கண்காணிப்பு அதிகாரிகள் நாள் தோறும் ஆய்வு மேற்கொள்ளாமல் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஆய்வு பணிக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.
இதன் மூலம் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. இதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குழாய்கள் மூலம் வரும் குடிநீருடன், கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:
சென்னைக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையிலேயே இருக்கிறது. பல இடங்கள் தண்ணீரில் துர்நாற்றமும் வீசுகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் குறித்து அதிகாரிகள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை. குடிநீர் பிரச்னை என்பது ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதாரமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்திகொண்டு சில தனியார் லாரி நிறுவனங்கள் தண்ணீர் குடம் ஒன்று ₹50 என விற்பனை செய்து பெரும் கொள்ளையில் ஈடுபடுகிறது. இதுபோன்று தண்ணீர் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு செய்து தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

பெட்ரோல், டீசல் லாரிகளில்...
 
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர போதிய லாரிகள் இல்லாததால் சுமார் 400 பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இது போன்ற லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் பாதுகாப்பானதா?, டேங்கர் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

டோக்கன் முறை அமல்

தண்ணீர் பஞ்சத்தால் சிக்கித்தவிக்கும் மக்கள் சென்னையில் இரவு,பகல் பாராமல் காலி குடங்களுடன் வலம் வந்தவாறு இருக்கின்றனர். பல இடங்களில் தண்ணீர் பிடிக்க மக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் மூலம் வரிசையில் வந்து தண்ணீர் பிடித்து செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Chennai , Unclean tanker lorry, cans, chennai, distribution
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...