மாமூலில் கொழிக்கும் புட் செல் போலீஸ்!

தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் மூன்று மலைப்பாதைகள் உள்ளன. இந்த குமுளி, போடி, கம்பம் மெட்டு மலைப்பாதைகள் வழியே தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இவை தவிர தேவாரம், கோம்பை, கம்பம் வழியே ஒற்றையடி மலைப்பாதைகளும் அடர்ந்த காடுகளுக்குள் செல்கின்றன. இவ்வழியே தினந்தோறும் ரேஷனில் இலவசமாக மக்களுக்கு தரப்படும் அரிசி சரக்கு லாரிகள், மாட்டு வண்டிகள், ஜீப்களில் கடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் 60க்கும் மேற்பட்ட மில்கள் செயல்படுகின்றன. இந்த மில்களில் ரேஷனில் தரப்படும் அரிசியை மாவாக அரைத்து மாடுகளுக்கு தீவனமாக விற்பனை செய்வதும் நடக்கிறது. இதுதவிர மாவட்டத்தில் அவ்வப்போது ரேஷன் அரிசி கொண்டு செல்கிறார்கள் என பிடிக்கப்படும் நபர்களிடமும் பேரம் பேசி கறப்பதும் நடக்கிறது. ரேஷன் கடைகளில் மாத மாமூல், வீட்டு உபயோக சிலிண்டர்களை பிடித்து வசூல், தலைச்சுமை, கால்சுமையாக கொண்டு செல்பவர்களிடம்.. என வசூலோ.. வசூல் சொல்லமுடியாத அளவிற்கு செல்கிறது.

இவைதவிர லோக்கல் வருமானம் மட்டுமே உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புத்துறையில் அளவிட முடியாத அளவிற்கு செல்கிறது. மாதக்கடைசியில் சர்வசாதாரணமாக ₹3 முதல் ₹4 லட்சம் வரை வசூல் செய்வதற்கு என்றே ஏரியாவாரியாக புட்செல் போலீசார் பிரித்து அனுப்பப்படுகின்றனர். இதனை புகாராக கொண்டு சென்றாலும் நடவடிக்கை இல்லை. மாமூல் வசூல் பற்றி இதற்கு முன்பு புகாராக வந்தபோது 6 மாதம் வரை கட்டிப்போட்டது போல் இருந்த புட்செல் போலீஸ் இப்போது வசூல்.. வசூல் என வரிந்து கட்டி கறக்கிறார்கள். இவர்களுக்கு கடிவாளம் போடுவதற்கு மாநில அளவிலான அதிகாரிகள் இனிமேலாவது முன்வருவார்களா?.

Related Stories: