×

ஒரு சில சட்டசபை இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியில் நீடிக்கும் தார்மீக பொறுப்பை முதல்வர் எடப்பாடி இழந்து விட்டார்

சென்னை: ஒரு சில சட்டசபை இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியில் நீடிக்கின்ற தார்மீக பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழந்து விட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக பொருளாளரும், ஈரோடு எம்பியுமான கணேச மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். அப்போது ஈரோடு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈரோடு கணேச மூர்த்தி மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். ெதாடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தார். இதை தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 8 கோடி தமிழர்களின் அரணாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் பணியாற்றுவார்கள். அகில இந்திய அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தலைமை ஆளுமை என்பது இந்த ேதர்தலில் தமிழகத்தின் வாக்காளர்கள் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. இது, மகிழ்ச்சிக்குரியது.

டாக்டர் கலைஞர் மறைவுக்கு பிறகு வீறுகொண்ட எழுந்த சக்தியாக திமுகவை முன்னெடுத்து வந்த பெருமையும், புகழும் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே சாரும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று பிற மாநிலத்தவர்கள் ஸ்டாலினை பிரமிப்புடன் பார்க்கின்றனர். இதனால், திமுகவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. உருவாகி இருக்க கூடிய இந்த அறைகூவல்களை எதிர்கொள்ளக்கூடிய  வல்லமையோடு, ஆற்றலோடு திமுக தலைமை தமிழக நலன்களை, உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு கோடான கோடி மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்றதால் தான், ஒரு சில சட்டசபையை பெற்றிருந்தாலும் ஆட்சியில் நீடிக்கின்ற தார்மீக பொறுப்பை முதல்வர் பழனிச்சாமி இழந்து விட்டதாக நான் கூறினேன். அது, பரிகாசத்திற்கு உரியது அல்ல. ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பை பிரதிபலிப்பதால் நான் கூறினேன். எப்படி இருந்தாலும் பழனிச்சாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. அடுத்த முதல்வர் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதிலும் எந்த நாள் என்பதை தான் வருகிற காலம் எதிர்பார்த்து வரவேற்க காத்து கொண்டிருக்கிறது.

Tags : Chief Minister , Assembly, Chief Minister Edappadi, has lost
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை